துருக்கி நிலநடுக்கம் – நூற்றாண்டில் துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவு – அந்த நாட்டின் ஐனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2023

துருக்கி நிலநடுக்கம இந்த நூற்றாண்டில் துருக்கியில் ஏற்பட்ட மிகவும் மோசமான பேரழிவு என அந்த நாட்டின் ஐனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் துருக்கியின் உள்கட்டமைப்புக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. 7.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 4,000 இற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியிருக்கின்றனர்.

நிலநடுக்கம் தொடர்பாக அந்த நாட்டு ஜனாதிபதி, “இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகவும் மோசமான பேரழிவு. முதல் நிலநடுக்கம் 7.8 என்ற ரிச்டர் அளவில் ஏற்பட்ட அடுத்த 12 மணி நேரத்துக்குள், இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ரிச்டர் அளவில் ஏற்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கடுமையான பனிக்காலம், மின்சாரத் துண்டிப்பு, தொடர்ந்து மக்கள் மத்தியில் இருக்கும் பேரதிர்ச்சி, இன்னும் கட்டிடத்துக்குள் சிக்கி மீட்கப்படாத மக்கள் என, மீட்புப் படையினருக்குப் பெரும் சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

துருக்கியின் ஹடாய் (Hatay) மாகாணத்தில், விமான நிலையத்திலுள்ள ஒரே ஓடுபாதையும் பிளந்து முற்றிலும் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சிதைந்திருக்கிறது.

மேலும், 2,200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட, ஐக்கிய நாடுகளின் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட காஜியான்டெப் கோட்டையும் இந்த நிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமாகியிருக்கிறது.

இந்தக் கோட்டையைக் காண வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்லும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளுக்கும் உதவ உலக நாடுகள் முயன்றுவருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் துருக்கிக்கு மீட்புக் குழுக்களை அனுப்பியிருக்கிறது, அதேநேரத்தில் நெதர்லாந்து மற்றும் ருமேனியாவிலிருந்து மீட்புப்படையினர் ஏற்கெனவே தங்கள் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

76 ஆய்வு நிபுணர்கள், உபகரணங்கள் மற்றும் மீட்பு நாய்களை அனுப்புவதாக இங்கிலாந்தும் கூறியிருக்கிறது.

இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், அமெரிக்கா, ரஷ்யா, இரான் ஆகிய நாடுகளும் உதவ முன்வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts:

மீண்டும் கொரோனா தொற்று பரவும் ஆபத்து ; தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு சுகாதார ...
முறையற்ற கொடுக்கல் வாங்கல் முறைகளின் தாக்கமே டொலர் நெருக்கடிக்கு காரணம்- மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக...
திருட்டு அதிகரிப்பு - பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகார...