துருக்கியில் வரலாறு காணாத ஜனநாயக பேரணி!

Wednesday, August 10th, 2016

துருக்கியில் கடந்த மாதம் தோல்வி அடைந்த இராணுவ சதிப்புரட்சிக்கு எதிர்ப்பு வெளியிட்டு இஸ்தான்பூலில் நடந்த ஜனநாயக ஆதரவு பேரணியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர்.

நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இரு எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து ஞாயிறன்று நடத்திய இந்த பிரமாண்ட பேரணி பல ஆண்டுகளில் துருக்கியில் இடம்பெற்ற ஒன்றிணைந்த பேரணியாக அமைந்தது.

பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான், “உலகமே உங்களை பார்த்திருக்கிறது” என்று ஒன்று திரண்டிருக்கும் மக்களை பார்த்து குறிப்பிட்டார். “நீங்கள் உங்களை பற்றி பெருமை அடையுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்காக போராடியவர்கள். நீங்கள் அனைவரும் வீரர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இராணுவ சதிப்புரட்சி நிகழ்ந்த இரவில் துருக்கி மக்கள் “எந்த ஒரு சதிப்புரட்சியையும் முறியடிக்க வல்லமை பெற்றவர்கள்” என்று நிரூபித்ததாகவும் எர்துவான் குறிப்பிட்டார். தமது அரசை கவிழ்க்க சதி செய்தவர்களை “தீவிரவாத குழு” என்று அவர் அடையாளமிட்டார்.

துருக்கி வரலாற்றில் அதிக மக்கள் திரண்ட பேரணிகளில் ஒன்றாக இது அமைந்திருந்ததாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் வர்ணித்துள்ளனர். ஒரு மில்லியன் மக்கள் ஒன்று கூடக்கூடிய மைதானத்தில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் மைதானத்திற்கு வெளியிலும் மக்கள் நிரம்பி வழிந்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜூலை 15 இராணுவ சதிப்புரட்சி முயற்சியின்போது 270க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து அரசு பரந்த அளவில் பதில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இராணுவம், நீதித்துறை, சிவில் சேவை மற்றும் கல்வித் துறையைச் சேர்ந்த 70,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்றம் மற்றும் மக்களின் ஆதரவு கிடைத்தால் நாட்டில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்த தயாராக இருப்பதாக எர்துவான் ஞாயிறு பேரணியில் தெரிவித்தார். “ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் மரண தண்டனை இல்லை என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அமெரிக்காவில் இருக்கிறது, ஜப்பானில் இருக்கிறது, சீனாவில் இருக்கிறது. உலகின் பெரும்பாலான பகுதியில் இருக்கிறது.

எனவே அவர்கள் அதற்கு அனுமதி அளித்திருக்கிறார்கள். 1984 வரை நாமும் அதனை பயன்படுத்தினோம். மக்களின் கையிலேயே இறைமை உள்ளது. எனவே மக்கள் முடிவெடுத்தால் அரசியல் தரப்புகள் அதனை அமுல்படுத்தும் என்பது உறுதியானது” என்று எர்துவான் வலியுறுத்தினார். இராணுவ சதிப்புரட்சி முயற்சிக்கு எதிராக துருக்கி முன்னெடுத்து வரும் களையெடுப்பு நடவடிக்கைகளுக்கு மேற்குல நாடுகள் கண்டனம் வெளியிட்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளில் மரண தண்டனை அமுல்படுத்துவதை அந்த அமைப்பு தடுத்துள்ளது. துருக்கியும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விண்ணப்பித்துள்ளது.

Related posts: