தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்கவைத்த பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரர்!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர், இலங்கையைச் சேர்ந்த தனது நண்பரை தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்கவைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில், துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா அவுஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ளார். பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட இவரது சகோதரரின் பெயர் அர்சகான் கவாஜா(26).
இவருக்கு இலங்கையைச் சேர்ந்த முகமது கமீர் நிஜாமுதீன் என்பவர், பல்கலைக்கழகத்தில் நண்பரானார். ஆனால், ஒரு பெண்ணை காதலிப்பது தொடர்பாக இவர்களுக்குள் போட்டி எழுந்ததாக கூறப்படுகிறது.
இதனால் முகமது கமீரை பழிவாங்க நினைத்த அர்சகான் கவாஜா, அவுஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லை நிஜாமுதீன் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நிஜாமுதீனை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் இந்த குற்றச்சாட்டுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். ஆனால், பொலிசார் நடத்திய விசாரணையில் டைரி ஒன்று கைப்பற்றப்பட்டது.
அதில் பிரதமர் டர்ன்புல்லை கொலை செய்வது தொடர்பான திட்டம் எழுதி வைக்கப்பட்டிருந்தது. இது தன்னுடைய கையெழுத்து இல்லை என்று நிஜாமுதீன் அதையும் மறுத்தார்.
அதன் பின்னர் அது அவருடைய கையெழுத்து இல்லை என்பதை பொலிசார் உறுதி செய்த பின்னர், நிஜாமுதீன் விடுவிக்கப்பட்டார். மேலும் இதுதொடர்பாக பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில், கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சகான் கவாஜா தான் நிஜாமுதீனை இவ்வாறு சிக்கவைத்துள்ளார் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில், உஸ்மான் கவாஜாவின் வீட்டுக்குச் சென்ற பொலிசார் அர்சகானை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில்,
‘நிஜாமுதீன் மிகவும் திட்டமிட்டு இந்த குற்றச்சாட்டில் சிக்கவைக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட விரோதம் காரணமாக அவர் மீது இந்தப் புகார் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இலங்கையைச் சேர்ந்த நிஜாமுதீனுக்கு தேவையில்லாத தொந்தரவுகளை கொடுத்துவிட்டதற்காக மன்னிப்பு கோருகிறோம். அவர் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்துவிட்டோம்.
அவருக்குரிய நீதிமன்ற செலவையும் பொலிசார் வழங்குவார்கள். நிஜாமுதீனை கைது செய்து எங்கள் பாதுகாப்பில் வைத்தமைக்கும், அவரிடம் விசாரணை நடத்தியமைக்கும் நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அர்சகான் கவாஜாவிடம் விசாரணை நடந்து வருகிறது’ என தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|