தினகரனின் நீதிமன்ற காவல் நீடிப்பு!

Tuesday, May 16th, 2017

இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி. தினகரனின் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

தினகரனின் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நிறைவடைந்துள்ள நிலையில், அவர்  நேற்று (திங்கட்கிழமை) டெல்லி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டவர்களின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீடித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகரனின் குரல் பதிவை ஆய்வு செய்ய அனுமதி கோரி டெல்லி பொலிஸார் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், குறித்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகரனின் வழக்கறிஞர்கள் டெல்லி நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, வழக்கு விசாரணையும் அன்றைய தினத்திற்கே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் பெற்றதாக, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை டெல்லி பொலிஸார் கைதுசெய்ததோடு, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து  தினகரன் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: