தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு பிடியாணை!

Saturday, August 26th, 2017

அரிசி மானிய திட்ட ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினாவத்ராவிற்கு அந்நாடடு நீதிமன்றம் பிடியானை வழங்கியுள்ளது.

நேற்றைய தினம் இடம் பெற்ற வழக்கு விசாரணைக்கு யிங்லக் சமூகமளிக்காதமையினை அடுத்தே அவருக்கு பிடியானை வழங்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில், யிங்லக் பிரதமராக கடமையாற்றிய காலப்பகுதியில் வேளாண் மானியத் திட்டத்தின் கீழ் சந்தை விலையைவிட கூடுதல் விலையில் அரசாங்கத்திற்கு நெல்லை விற்க விவசாயிகளுக்கு சலுகை வழங்கப்பட்டிருந்தது.இதனால் தாய்லாந்து அரசாங்கத்திற்கு பல பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருந்தது.

அத்துடன் யிங்லக் வழங்கிய சலுகையினால், விவசாயிகள் நெல் உற்பத்தியை அதிகரித்ததால் அரசாங்கக் களஞ்சிய சாலைகளில் கிட்டத்தட்ட 18 மில்லியன் தொன் அரிசி விற்கப்படாமல் தேங்கிக் கிடந்தது.

இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு தாய்லாந்தில் இடம்பெற்ற  இராணுவப் புரட்சி மூலம் யிங்லக் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.அத்துடன் யிங்லக் தலைமையிலான அரசாங்கம் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டது என குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்தே யிங்லக் மீது வழக்கு பதியப்பட்டதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.எனினும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை யிங்லக் தொடர்ந்து நிராகரித்து வந்திருந்தார்.

இந்த நிலையில், யிங்லக்கிற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றவியல் கவனக்குறைவு வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

எனினும், யிங்லக் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத படியினால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், யிங்லக் சுகயீனம் காரணமாகவே நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என அவரது சார்பில் முன்னிலையான யிங்லக்கின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யிங்லக் மீதான குற்றம் நிரூபிக்கப்படின் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: