தாக்குதலை நிறுத்துமாறு கனடா பிரதமர் கோரிக்கை!

Friday, September 15th, 2017

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம் இனத்தவர்கள் மீதான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஆங் சான் சூகியிடம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மியான்மார் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்களாதேஷிற்கும், இந்தியாவிற்கும் தப்பியோடி உள்ளனர். இதற்கு பல தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மியான்மர் நாட்டின் தலைவராகவும், அரசின் ஆலோசகராகவும் உள்ள ஆங் சான் சூகியிடம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று தொலைபேசி மூலம் பேசியுள்ளார். அப்போது, ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஜஸ்டின் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், மியான்மரின் தார்மீக மற்றும் அரசியல் தலைவராக உள்ள ஆங் சான் சூகியிடம், ராக்கீன் பகுதியில் ரோஹிங்கியா இனத்தவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து தனது கவலையையும் ஜஸ்டின் வெளிப்படுத்தியுள்ளார். ஆங் சான் சூகி கனடா நாட்டின் சிறப்பு குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ஆங் சான் சூகி நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து மக்களிடம் அடுத்த வாரம் உரையாற்றுவார் என்று மியான்மர் அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

Related posts: