தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ்!
Sunday, July 17th, 2016
பிரான்ஸின் நைஸ் நகரில் மக்கள் மீது லாரியை ஏற்றி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
பிரான்ஸ் தேசிய தினத்தையொட்டி, அந்த நாட்டின் நைஸ் நகரில் வியாழக்கிழமை நள்ளிரவு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைக் கண்டுகளிப்பதற்காக வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
அப்போது வேகமாக லாரியை ஓட்டி வந்த துனீசிய வம்சாவளி இளைஞர், மக்கள் கூட்டத்தின் மீது அதனை கண்மூடித்தனமாக செலுத்தினார். இதில் 10 குழந்தைகள் மற்றும் சிறார்கள் உள்பட 84 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் அறிவித்தார்.
உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதுகுறித்து அந்த அமைப்புடன் தொடர்புடைய “அமாக்’ செய்தி நிறுவனம் சனிக்கிழமை கூறியதாவது:
பிரான்ஸ் தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது, தங்களது அமைப்பைச் சேர்ந்த “வீரர்’கள் தாக்குதல் நிகழ்த்தியதாக ஐ.எஸ். வட்டாரங்கள் தெரிவித்தன.
தங்களுக்கு எதிரான சர்வதேசக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள், அந்தந்த நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்த வேண்டும் என்ற தங்களது அழைப்பை ஏற்று இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக ஐ.எஸ். வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
லொறி ஏற்றி பொதுமக்களைக் கொன்ற நபர் துனீசியாவைப் பூர்விகமாகக் கொண்டவர் என்று ஏற்கெனவே அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், அந்த நபரின் பெயர் முகமது லாஹுவாயிஸ் பிலால் (31) என்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அரசு வழக்குரைஞர் பிரான்சுவா மோலின்ஸ் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: லொறி ஓட்டுநரான முகமது பிலால், பொருள்களை உரிய இடங்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியை செய்து வந்தார். அவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2010 ஆண்டிலிருந்து அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
ஆயுதமேந்தி வன்முறையில் ஈடுபட்டதாக அவருக்கு கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவரது நன்னடத்தையை கண்காணிப்பதற்காக அந்தத் தண்டனை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுபோன்ற குற்றங்களில் அவர் ஈடுபட்டாலும், அவர் மதரீதியிலான தாக்குதல் நிகழ்த்துவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான உளவு அமைப்புகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் வெளிப்படையாக எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை.
முகமது பிலாலின் மனைவியிடம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார் மோலின்ஸ். முகமது பிலால் யாருடனும் அதிகம் பேச மாட்டார் எனவும், அவர் தன்னை தீவிர மதப்பற்றாளராக ஒருபோதும் காட்டிக் கொண்டதில்லை என்றும் அவரைத் தெரிந்தவர்கள் கூறினர்.
லாரியில் கிடைத்த அடையாள அட்டை, வங்கி அட்டை, விரல் ரேகைகள் ஆகிவற்றைக் கொண்டு அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தின்போது பிலால் ஓட்டிச் சென்ற லாரியை சுற்றி வளைத்த போலீஸார், அவரை சுட்டுக் கொன்றனர்.
இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாகவும், மற்ற மூவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாகவும் நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய தினத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக பிரான்ஸ் அரசு அறிவித்திருந்த 3 நாள் துக்க அனுசரிப்பு சனிக்கிழமை தொடங்கியது.
Related posts:
|
|