தவறான தீர்ப்பு: 118 கோடி இழப்பீடு!

Friday, June 10th, 2016

கனடாவில் தவறான தீர்ப்பால் 27 ஆண்டுகள் சிறையில் கழித்த நபருக்கு அரசு ரூ.118 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள வான்கூவர் நகரில் இவான் ஹென்றி என்ற நபர் வசித்து வந்துள்ளார்.

கடந்த 1982ம் ஆண்டில் இவான் மீது 10 பாலியல் தாக்குதல்கள் புகார்கள் சுமத்தப்பட்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சுமார் 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.

ஆனால், இந்த குற்றங்களை தான் செய்யவில்லை என பலமுறை கூறியும் அதனை இவானால் நிரூபிக்க முடியவில்லை.

எனினும், நம்பிக்கையை தளரவிடாத இவான் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

நீதிமன்றத்தில் மேல் முறையீடு மீதான விசாரணையின் போது இவானை நிரபராதி என நிரூபிக்கும் ஒரு முக்கிய ஆதாரத்தை அதிகாரிகள் வெளியிடாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆதாரம் வெளியிடப்பட்டிருந்தால் இவான் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டிருப்பார். இந்த விவகாரம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டில் நீதிமன்றம் இவானை விடுதலை செய்தது.

ஆனால், குற்றம் செய்யாத நிலையில் 27 வருடங்கள் சிறையில் அடைத்ததற்காக வான்கூவர் அரசு மீது இவான் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, முக்கிய ஆதாரத்தை வெளியிடாமல் நிரபராதியை சிறையில் அடைக்க காரணமாக இருந்த கவுன்சில் அதிகாரிகளுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், இவான் இதுவரை இழந்த வருமானத்திற்கு இழப்பீடாக 5,30,000 டொலர், இவானுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட சேதாரத்திற்கு 56,700 டொலர் மற்றும் இவான் விசாரணையின் போது நிகழ்த்தப்பட்ட விதிமீறல்களுக்காக 7.5 மில்லியன் டொலர் என மொத்தமாக்க 8 மில்லியன் டொலருக்கு அதிகமாக(118 கோடி இலங்கை ரூபாய்)அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.