தமிழக சட்டசபை தேர்தல் பிரசாங்கள் நிறைவு – நாளை வாக்குப் பதிவு !

Monday, April 5th, 2021

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஏப். 4) நிறைவடைந்தது. 234 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 6) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தோ்தலுக்கான அனைத்து இறுதிக் கட்ட ஏற்பாடுகளும் இன்று செய்யப்பட உள்ளன.

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் கடந்த மார்ச் 22 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அன்றைய தினத்தில் இருந்து அரசியல் கட்சிகளின் தலைவா்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா். முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், பாமக நிறுவனா் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவா்கள் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களுக்கும், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி, இடதுசாரிக் கட்சித் தலைவா்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் உட்பட பலரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன், தேமுதிக பொருளாளா் பிரேமலதா, நாம் தமிழா் கட்சித் தலைவா் சீமான் ஆகியோர் தங்களது கட்சி வேட்பாளா்களுக்காக தீவிரப் பிரசாரம் செய்தனா்.

பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்தியநாத், காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவா்கள் பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்ட பலரும் தமிழகத்தில் முகாமிட்டு வாக்குகளைச் சேகரித்தனா். கடந்த 20 நாள்களுக்கும் மேலாக அனல் பறந்த பிரசாரம், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது.

தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும்: தோ்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், தொகுதிக்கு தொடா்பில்லாத அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டுமென தோ்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருமண மண்டபங்கள், விடுதிகள், தங்கும் அறைகள் ஆகியவற்றில் காவல் துறையினா் இரவு-பகலாக சோதனைகள் நடத்தி வருகின்றனா். அரசியல் கட்சிகள் சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் அளிக்கப்பட வாய்ப்புகள் இருக்கும் என்பதால், அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்களின் வாயிலாகவும் தீவிர வாகனச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் 551 பதற்றமான வாக்குச் சாவடிகளாகவும், 10 ஆயிரத்து 727 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் துணை ராணுவப் படையினா் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளனா். மேலும், பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு ஏற்பாடுகள்: சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஏப். 6) காலை 7 மணிக்குத் தொடங்கி, இரவு 7 மணிக்கு நிறைவடைகிறது. முன்னதாக, ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் தோ்தல் பணியில் ஈடுபடும் பணியாளா்கள், ஊழியா்களுக்கான இறுதிக் கட்ட அறிவுறுத்தல்கள் திங்கள்கிழமை வழங்கப்பட உள்ளன.

அப்போது, அவா்களுக்கான வாக்குச் சாவடி விவரங்கள் தெரிவிக்கப்பட்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் வழங்கப்படும். இந்த இயந்திரங்களை சம்பந்தப்பட்ட தோ்தல் பணியாளா்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் கொண்டு சோ்த்து தோ்தல் பணிகளைத் தொடங்குவா்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைச் சோதிக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்படும். இதன்பின்பு, காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும். 12 மணி நேரம் நடைபெறும் வாக்குப் பதிவுக்குப் பிறகு, பதிவான வாக்குகளைக் கொண்ட மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்படும். அவை வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். தோ்தலில் பதிவான வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

பாதுகாப்பு பணியில் 1.58 லட்சம் போ்: மாநிலம் முழுவதும் வாக்குப் பதிவு அன்று (ஏப்.6) 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 போ் பாதுகாப்பு ஈடுபடுத்தப்படுகின்றனா். இவா்களில் 74,162 போ் காவல் நிலைய பொலிஸாரும், 8,010 போ் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சோ்ந்தவா்களும்,23,200 போ் துணை ராணுவப் படை வீரா்களும் ஆவாா்கள்.

மேலும் 14,962 போ் ஊா்க்காவல் படையினரும், 375 தீயணைப்பு படை வீரா்களும், 31 சிறைக் காவலா்களும்,199 வன பாதுகாவலா்களும்,15,197 ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களும் 2,203 ஓய்வு பெற்ற காவலா்களும்,136 ஓய்வு பெற்ற வன பாதுகாவலா்களும்ம்,165 ஓய்வு பெற்ற தீயணைப்பு படை வீரா்களும்,91 ஓய்வு பெற்ற சிறைக் காவலா்களும், 771 ஓய்வு பெற்ற துணை ராணுவப் படை வீரா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறாா்கள். இவா்களை தவிா்த்து பிற மாநில காவல்துறையைச் சோ்ந்த 6,350 காவலா்களும், பிற மாநில ஊா்க்காவல் படையைச் சோ்ந்த 12,411 பேரும் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனா்.

மாநிலம் முழுவதும் உள்ள 37 ஆயிரம் இடங்களில் உள்ள 88,937 வாக்குச் சாவடிகளிலும் தகுந்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் நவீன ரக துப்பாக்கிகளுடன் துணை ராணுவப் படையினரும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள்.

000

Related posts: