தமிழக சட்டசபை தேர்தல் – தி.மு.க. கூட்டணி முன்னிலையில்!

Sunday, May 2nd, 2021

தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை ஆரம்பமானது. இதில் தி.மு.க கூட்டணி 142 இடங்களில் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கூட்டணியிலுள்ள தி.மு.க. 112 இடங்களிலும் காங்கிரஸ் 8, ம.தி.மு.க. 4 , சி.பி.எம். 3, சி.பி.ஐ. 2, வி.சி.க. 4, ஏனையவை ஒரு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஆட்சியிலுள்ள அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 96 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது என்றும், இவற்றில் அ.தி.மு.க. 84 இடங்களிலும் பா.ம.க 11, பா.ஜ.க 3 இடங்களிலும் முன்னிலையிலுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த இரு பிரதாக கூட்டணிகளையடுத்து மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறதென்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்பதாக கடந்த மாதம் ஆறாம் திகதி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்களிப்பு நடைபெற்றது.

மொத்தமுள்ள 6 கோடியே 26 லட்சம் வாக்காளர்களில், 4 கோடியே 57 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் வாக்குகள் எண்ணும் பணி, 75 மையங்களில் இன்று காலை எட்டு மணிமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான இறுதி முடிவு இன்று பிற்பகல் அளவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தமிழகமெங்கும் முழு ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே கட்சி தொண்டர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வெற்றிக் கொண்டாட்டங்களுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: