தமிழக அமைச்சரவையில் மாற்றம்!

Tuesday, August 30th, 2016

தமிழக அமைச்சரவையில் நேற்றுசில திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக அதிமுகவின் ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாண்டியராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

பால்வளத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த சண்முகநாதன் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பால்வளத்துறை அமைச்சகத்தின் அமைச்சர் பொறுப்பில் தொடர கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ராஜேந்திர பாலாஜி வகித்து வந்த ஊரக தொழில்துறை அமைச்சகத்தின் அமைச்சர் பொறுப்பு பெஞ்சமினுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் பெஞ்சமின் பொறுப்பிலிருந்த பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்திற்கு புதிய அமைச்சராக அதிமுகவின் ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாண்டியராஜன் பொறுப்பேற்கவுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அளித்துள்ள பரிந்துரையையடுத்து, இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது. அத்தோடு அதிமுகவின் ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாண்டியராஜன் புதிய அமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நாளை செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகளில், தமிழக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு 320 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

குறிப்பாக தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றியமைத்தல், சென்னை உள்ளிட்ட 7 மாநகராட்சிகள் மற்றும் 4 நகராட்சிகளில் 3,229 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் 36 நகராட்சிகளில் 116 கோடி ரூபாய் செலவில் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மக்களின் எந்தவொரு முக்கிய பிரச்சனைகள் தொடர்பிலும் ஜெயலலிதா இதுவரை அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு தமிழக ஆளுங்கட்சி, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களை அல்லது பிரதிநிதிகளை அழைத்து அவர்களின் கருத்தினை கேட்டறிய தவறிய காரணத்தால் தான், தமிழக மக்களை பாதிக்கும் விவகாரங்களில் அண்டை மாநில அரசுகள் துணிச்சலான முடிவுகளை எடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related posts: