கடன் தொல்லையால் நேர்ந்த சோகம்: ஒரு குடும்பமே தீக்குளித்த அவலம் – மூன்று பேர் பலி!

Tuesday, October 24th, 2017

கந்துவட்டி தொல்லையால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நான்கு பேரில் தாய் மற்றும் பெண் பிள்ளைகள் இருவரும் உயிரிழந்துள்ள சோக சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகம், நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன் கந்துவட்டி கொடூரம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.நெல்லை மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர், இசக்கிமுத்து. இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

அவர் மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு மதி சரண்யா என்ற 5 வயது குழந்தையும் அட்சய பரணிகா என்ற ஒன்றரை வயது குழந்தையும் உள்ளனர். இவர்கள் குடும்ப தேவைக்காக காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணிடம் 1.50 லட்சம் பணம் கடனாக வாங்கியுள்ளார்.

முத்துலட்சுமியும் அவர் குடும்பத்தினரும் இசக்கிமுத்துவை தொடர்ந்து மிரட்டியுள்ளனர்.இது தொடர்பாக அச்சன்புதூர் காவல்நிலையத்தில் இசக்கிமுத்து முறைப்பாடு செய்தார். ஆனால், காவற்துறையினர் கட்டப்பஞ்சாயத்து செய்ததுடன், பணத்தைக் கொடுக்குமாறு நெருக்கடி கொடுத்தனர். காவற்துறையினரும் தங்களுக்கு எதிராகச் செயல்படுவதால் இசக்கிமுத்துவும் அவர் மனைவியும் மனம் உடைந்தனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 முறை மனுக்கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் மனம் நொந்துபோன இசக்கிமுத்து மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சித்தார். இதையடுத்து படுகாயங்களுடன் மீட்கப்ட்ட 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , இசக்கிமுத்துவின் மனைவி மற்றும் குழந்தைகள் இருவரும்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: