தமிழகத்தின் துணை முதல்வர்?

Tuesday, October 4th, 2016

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் இருந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி வருகிறது.

முதல்வரின் உடல் நிலை குறித்து பல்வேறு அறிக்கைகள் வந்தாலும் எல்லா அறிக்கையிலும் மறக்காமல் வருவது முதல்வர் இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்வார் என்பது. ஏற்கனவே முதல்வர் 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறார், இன்னும் அவர் எப்பொழுது வழக்கமான பணிகளை தொடர்வார் என்பது தெரியாது என்பதால், அவர் குணமாகி வரும் வரை அரசு பணிகாள் தொய்வின்றி நடைபெற துணை முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதனிடையே, முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து உண்மையான அறிக்கை வெளியிட கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார். அந்த மனுவில், முதலமைச்சர் ஜெயலலிதா திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 22-ஆம் திகதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அவருக்கு என்ன நோய்? என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏனென்றால், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆஸ்பத்திரி அறையில் வைத்து முதலமைச்சர் ஆலோசனை செய்வதாக பத்திரிகைகளுக்கு செய்தி குறிப்புகள் வழங்கப்படுகின்றன.

முதலமைச்சர் உடல் நலம் குறித்து அவ்வப்போது வதந்திகளும் பரவுவதால், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெளியூருக்கும், வெளியிலும் செல்ல முடியாமல் பலர் தவிக்கின்றனர். முதலமைச்சரின் உடல் நலம் குறித்து பரவும் வதந்திகளால் பொது அமைதிக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், முதலமைச்சர் மருத்துவமனையில் உள்ளதால், அவர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் எல்லாம் முடங்கி விட்டன. அவர் உடல் நலம் சரியாகும் வரை, இடைக்கால முதலமைச்சர் ஒருவரை நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நடக்கப் போகும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றோடு முடியும் நிலையில், நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும், உரிய பாதுகாப்புடன் மக்கள் வாக்களிக்கும் வகையில் இந்த தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையமும், ஆளும்கட்சியும் மக்களுக்கு நம்பிக்கை தர வேண்டியது அவசியமாகிறது.

இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் நிரந்தர கவர்னர் இல்லாத நிலையிலும், ஒரு மருத்துவமனையில் பன்னிரண்டு நாட்களுக்கு மேல் அனுமதிக்கப்பட்டு, செயல்படாத முதல்வரை கொண்டதாகவும் உள்ளது. தமிழகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடி கவனம் செலுத்தி உரிய முடிவுகளை எடுக்க முடியாத அரசாக இந்த அரசு உள்ளது.

எனவே முதல்வரின் உடல்நிலை முழுவதும் சீராகும் வரை அந்த பொறுப்புக்கு வேறு ஒரு நபரை இந்த அரசு தேர்ந்தெடுக்க வேண்டும். மருத்துவமனையில் நடக்கும் உண்மை நிலையை மக்களுக்கு அறிவிக்கும் வண்ணம் முதல்வர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முதல்வர் ஜெயலலிதா குணமாகி வரும் வரை துணை முதல்வர் பதவியை வைகிக்க போவது யார் என்ற பேச்சும் அதிமுக வட்டாரத்தில் எழுந்து வருகிறதாம். அனேகமாக முன்னாள் முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் அல்லது பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரில் ஒருவர் துணை முதல்வராக வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

1459947746-3759

Related posts: