தந்தையினை பணயம் வைத்து ஆர்ஜன்டீன அணியை எதிர்கொண்டேன் – ஜோன் ஒபி மைக்கல்

Friday, July 6th, 2018

2018 பிபா உலகக் கிண்ணத்தின் குழுநிலை போட்டிகளுடன் நைஜீரிய அணி கடந்த 26ஆம் திகதி, மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜன்டீன அணியை எதிர்கொண்டு வெளியேறியிருந்தது.
இந்நிலையில் நைஜீரிய அணி, ஆர்ஜன்டீன அணிக்கெதிரான குழுநிலை போட்டியில் மோதவிருந்த தினத்தில் அந்த அணியின் தலைவர் ஜோன் ஒபி மைக்கலின் தந்தை கடத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இந்த போட்டி ஆரம்பிக்க நான்கு மணித்தியாலங்கள் மாத்திரம் இருந்த நிலையில், ஜோன் ஒபி மைக்கலுக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்திருந்தது.
இந்த அழைப்பில் பேசிய கடத்தல்காரர்கள், ஜோன் ஒபி மைக்கலின் தந்தையை கடத்தியுள்ளதாகவும், 28,000 அமெரிக்க டொலர்கள் கொடுத்தால் மாத்திரமே அவரை உயிருடன் விடுவோம். இல்லையென்றால் அவரை கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
ஜோன் ஒபி மைக்கலின் தந்தையான பா மைக்கல் ஒபி, சௌத் ஈஸ்டன் பகுதியில் மரணவீடு ஒன்றுக்கு சென்று தனது சாரதியுடன், வீடு திரும்பியுள்ளார். அவர் திரும்பி மகுர்தி-எனுகு அதிவேக பாதையில் வரும் போது, பா மைக்கல் ஒபி கடத்தப்பட்டுள்ளார். பின்னர் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி பா மைக்கல் ஒபி மற்றும் சாரதியை காப்பாற்றியுள்ளனர்.
தந்தையின் கடத்தல் விவகாரம் குறித்து தெரிவித்த ஜோன் ஒபி மைக்கல்,
“நான் குழப்பமடைந்திருந்தேன். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன். 180 மில்லியன் மக்களின் கனவை சிதைத்துவிட்டு செல்ல எனது மனம் இடம் கொடுக்கவில்லை.
இதனால் நாடும், மக்களும் தான் முக்கியம் என உணர்ந்து, நான் எனது அணிக்காக, நாட்டுக்காக விளையாட முடிவு செய்தேன். அவர்கள் தந்தை கடத்தப்பட்ட விடயத்தை அதிகாரிகளுக்கு கூறினால் தந்தையை உடனே சுட்டுக்கொன்று விடுவதாக அச்சுறுத்தினர்.
தந்தை கடத்தப்பட்ட விடயத்தை மனதில் வைத்துக் கொண்டு, யாரிடமும் கலந்துரையாடாமல் இருந்தேன். எனது பயிற்றுவிப்பாளர் மற்றும் சக வீரர்களின் கவனத்தை திருப்ப விரும்பாததால், யாருக்கும் இந்த விடயத்தைப் பற்றி கூறவில்லை. பயிற்றுவிப்பாளரிடம் கூற மனம் வந்தும் நான் அதனை செய்யவில்லை..”
இதேவேளை நைஜீரிய உதைப்பந்தாட்ட வீரர்களின் வீட்டுக்கு தற்போது அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டள்ளதாக நைஜீரிய பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: