டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கான காரணங்கள்!

Wednesday, November 9th, 2016

அனைத்து எதிர்பார்ப்புக்களையும் கணிப்புக்களையும் மீறி, வெற்றிக்கனியைப் பறித்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப். அதற்கான முக்கிய காரணங்கள்:

முடிவுகள் தலைகீழாக மாறின. ஒஹியோ, ஃபுளோரிடா, வட கரோலினா ஆகிய அனைத்தும் டிரம்புக்கு ஆதரவாக மாறின. அதுதான், ஹிலரி கிளிண்டனின் பாதுகாப்பு அரணைத் தகர்த்தெறிந்தது.

மத்திய மேற்கு பிராந்தியம் ஹிலரிக்கு பெருமளவில் கை கொடுக்கும் என்று நம்பினார்கள். பல பதிற்றாண்டுகளாக அந்தப் பிராந்தியம், ஜனநாயக் கட்சிக்கு ஆதரவாகவே இருந்தன. கறுப்பினத்தவர் மற்றும் வெள்ளையின உழைக்கும் வர்க்கம் அவர்கள் பக்கம் இருந்தது.

அந்த வெள்ளையின உழைக்கும் வர்க்கம், குறிப்பாக கல்லூரிப் படிப்பு இல்லாத ஆண்களும் பெண்களும், இந்த முறை ஜனநாயகக் கட்சியைக் கைவிட்டார்கள். கிராம மக்கள் பெருமளவில் திரண்டு வாக்களித்தார்கள். கடலோரப் பகுதியில் உள்ள செல்வந்தர்கள் மற்றும் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டதாக அவர்கள் அதிருப்தியடைந்திருந்தார்கள். இப்போது தங்கள் குரலை ஒலிக்கச் செய்திருக்கிறார்கள்.

விர்ஜினியா, கொலராடோ மாகாணங்கள் விரைவில் விழந்த நிலையில், விஸ்கான்சினும் டிரம்புக்கு ஆதரவாக வீழ்ந்தபோது, ஹிலரியின் நம்பிக்கை தகர்ந்தது.

பலரை அவமானப்படுத்தியதாக, ஊடகங்களை பகைத்துக் கொண்டதாக விமர்சிக்கப்பட்டார். பெண்களிடம் பாலியல் ரீதியாக ஈர்க்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இப்படி பல குற்றச்சாட்டுக்கள் டிரம்பை கடுமையாகவும், வேகமாகவும் தாக்கின. ஆனால், உறுதியான குணம் கொண்ட டிரம்ப் அதனால் அதிர்ந்துபோய்விடவில்லை. குண்டுதுளைக்காத ஆடை அணிந்தவரைப் போல, அந்தத் தாக்குதல்களும் அவர் மீது பட்டுத் தெறித்துவிட்டன.

ஜனநாயகக் கட்சியினருக்கு எதிராகப் போராடினார். தனது கட்சியில் உள்ள செல்வாக்கு மிக்க சக்திகளுக்கு எதிராகவும் போராடினார். எல்லோரையும் வென்றுவிட்டார்.

அவரது அந்த போராட்ட குணமே, டிரம்புக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் பூர்வாங்க சுற்றில் மோதிய பெர்னி சேன்டர்ஸ், டெட் க்ரூஸ் உள்ளிட்ட தேசிய அரசியல்வாதிகள் வாக்காளர்களின் மனநிலையை ஓரளவு அறிந்திருந்தார்கள். ஆனால், டிரம்பை போல யாரும் முழுமையாக அறிந்து வைத்திருக்கவில்லை.

ஹிலரி கிளிண்டன், தனியார் சர்வர்கள் மூலமாக, தனது மின்னஞ்சல்களைப் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, எப்.பி.ஜ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடத்துவதா, இல்லையா என்ற குழப்பமும் இதில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.

பிரசாரம் நடந்து கொண்டிருந்தபோது, சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, கிளிண்டன் மீதான விசாரணையை மீண்டும் துவக்கப் போவதாக எப்.பி.ஐ யக்குநர் ஜேம்ஸ் கோமி அறிவித்தார்.அப்போதிருந்து டிரம்ப் தனது பிடியை இறுக்கத் துவங்கினார். அவரது பிரசார வேகம், எடுத்து வைத்த கருத்துக்கள் அதிக ஆதரவாளர்களை அவரது பக்கம் கொண்டு வந்தது.

அடுத்த இரு வாரங்களில், எப்.பி.ஐ நிலையை மாற்றிக் கொண்டது. ஹிலரிக்கு எதிராக விசாரணை நடத்தப் போவதில்லை என ஜேம்ஸ் கோமி அறிவித்தார்.ஹிலரி, தனது அதிகாரப்பூர்வ பணிகளுக்கான மின்னஞ்சல்களுக்கு அரசாங்க சர்வர்களைப் பயன்படுத்தியிருந்தால் இந்தச் சிக்கல் எழுந்திருக்காது. அந்த சுமை அவரது தோள்களை விட்டு இறங்கவில்லை.

அரசியல் மரபுகளுக்கு மாறான பிரசார யுத்திகளை மேற்கொண்டார் டிரம்ப். ஆனால் அதன் நுணுக்கங்களை, நிபுணர்களைவிட கூடுதலாகவே தெரிந்து வைத்திருந்தார்.நெருங்கவே முடியாது என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்ட விஸ்கான்சின், மிச்சிகன் போன்ற மாகாணங்களில் மாபெரும் பேரணிகளை நடத்தினார் டிரம்ப். ஆனாலும், ஹிலரியின் பிரசாரத்துடன் ஒப்பிடுகையில் டிரம்பின் பிரசாரம் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக பரிகாசிக்கப்பட்டது. ஆனால், சூட்சமத்தை தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார் டிரம்ப்.

கடைசியில் வெற்றி முரசைக் கொட்டியிருக்கிரார் டிரம்ப். டிரம்பின் நெருங்கிய வட்டம், குழந்தைகள் மற்றும் ஆலோசகர்கள், இனி வெள்ளை மாளிகையில் இருந்து, அமெரிக்காவுக்கு மட்டுமன்றி, உலக அளவில் யுத்திகளை வகுக்கப் போகிறார்கள்.

_92349112_606e5294-3639-42fc-a646-0168c4d1e159

Related posts: