ஜெர்மன் கால்பந்து அணி பயணம் செய்த பேருந்து மீது குண்டுத் தாக்குதல்!
Wednesday, April 12th, 2017ஜெர்மனியில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக வீரர்கள் சென்ற பஸ்ஸை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த கால்பந்தாட்ட வீரர் மார்க் பர்ட்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய யூனியன் கால்பந்து சங்கங்களின் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் மொனாக்கோ அணியும், பொரஷியா டார்ட்மன்ட் அணியும் இன்று ஜெர்மனியில் உள்ள வெஸ்ட் ஃபாலன்ஸ்டேடியன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துவதாக இருந்தது.
இந்த போட்டியில் கலந்துகொள்ள பொரஷியா டார்ட்மன்ட் அணி வீரர்கள் பயணித்த பஸ்ஸை இலக்கு வைத்தே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது மூன்று பாரிய வெடிப்புக்கள் இடம்பெற்றதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன
மார்க் பர்ட்ரா தவிர்ந்த மற்ற வீரர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், மைதானத்தைச் சுற்றி எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கால்பந்துப் போட்டி புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கால்பந்தாட்ட வீரர்களே தாக்குதலின் இலக்காக இருந்ததாக நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்த அணியின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், டார்ட்மண்ட் அணி புறப்பட்ட சிறிது நேரத்தில் சம்பவம் நடந்துள்ளது. பஸ்ஸின் இரண்டு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் முன்னிலையில் உள்ள அணிகளில் நான்காவது முக்கிய அணி டார்ட்மன்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|