ஜெருசலேம் விவகாரம்: காஸா எல்லையில் தொடரும் பதற்றம்!
Wednesday, May 16th, 2018சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஸா எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பதற்றம் நீடித்தது.
இதனிடையே, ஆர்ப்பட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் படையினர் திங்கள்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59-ஆக உயர்ந்துள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுமே உரிமை கொண்டாடி வரும் சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை, இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கவிருப்பதாகவும், தற்போது டெல்-அவிவ் நகரிலுள்ள இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றவிருப்பதாகவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் திகதி அறிவித்தார்.
அதுவரை பாலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்கா நீண்ட காலமாக கடைப்பிடித்து வந்த நடுநிலைக்கு எதிரான இந்த அறிவிப்புக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. பல்வேறு நாடுகளில் இந்த முடிவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பது, பாலஸ்தீனப் பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் என்று பலர் எச்சரித்தனர்.
இந்தச் சூழலில், திட்டமிட்டபடி அமெரிக்க தூதரகம் டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேமுக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் எல்லை அருகே தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது டயர்களை கொளுத்தியும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் அவர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்களை கலைக்க, இஸ்ரேல் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும், ஆர்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்தினர்.
இந்த மோதலில், 41 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாகவும், 2,700 காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தாக்குதலில் காயமடைந்த மேலும் 18 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த எண்ணிக்கை 59-ஆக உயர்ந்ததாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
உயிரிழந்தவர்களில் இஸ்ரேல் வீரர்கள் வீசிய கண்ணீர் புகைக் குண்டுக்கு பலியான 8 மாத பெண் குழந்தையும் அடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டு, அங்கு வசித்த 7 லட்சம் பாலஸ்தீனர்கள் கடந்த 1948-ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டதைக் குறிக்கும் “நக்பா’ நினைவு தினத்தையொட்டி இஸ்ரேல் எல்லையில் மேலும் தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட பாலஸ்தீனர்கள் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இதையடுத்து, அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது.
நடுநிலை விசாரணை: ஐ.நா. தீர்மானத்தை தடுத்தது அமெரிக்கா
இஸ்ரேல் – காஸா எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 59 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தடை செய்தது.
“அமைதியான முறையில் போராடுவதற்கான பாலஸ்தீனர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து, அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வன்மையாகக் கண்டிக்கிறது. அந்தச் சம்பவம் குறித்து நடுநிலையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று அந்த வரைவுத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது
Related posts:
|
|