ஜெயலலிதா மரணம் திட்டமிட்டு நடந்த சதி!

Tuesday, January 10th, 2017

முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சசிகலா புஷ்பா கொடுத்த மனுவை சி.பி.ஐயின் நிர்வாக அமைப்புக்கு அனுப்பியிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.’

ஜெயலலிதா மீண்டும் வந்து விடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியாகவே பார்க்கிறோம் என்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி.மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சில நாட்களுக்கு முன்பு சந்தித்தார் அ.தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதால், மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார் அவர்.

அடுத்ததாக பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து, தமிழக அரசியல் சூழல்கள் குறித்து விவாதித்தார். இந்த நடவடிக்கைகளை அச்சத்தோடு கவனித்து வந்தது சசிகலா நடராஜன் தரப்பு.தற்போது சி.பி.ஐயின் நிர்வாக அமைப்பான பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறைக்கு சசிகலா புஷ்பாவின் மனுவை அனுப்பியிருக்கிறது உள்துறை அமைச்சகம்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதற்கான அடிப்படை முகாந்திரம் இருந்தால், வழக்கை சி.பி.ஐ விசாரிக்கும்’ என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட நாளில், உயர் நீதிமன்ற நீதியரசர் தெரிவித்த கருத்துகளும் தற்போது உள்துறையின் அதிரடிகளும் அ.தி.மு.க சிரேஷ்ட உறுப்பினர்களை கவனிக்க வைத்துள்ளன.

பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதற்காக விண்ணப்பம் வாங்கச் சென்ற சசிகலா புஷ்பாவின் கணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. எந்தவிதத் தேர்தலும் இல்லாமல் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார் சசிகலா.”கழகத்தின் விதிகளைக் கடைப்பிடிக்காமல்தான் பதவிக்குக் கொண்டு வரப்பட்டார்.

எப்படி இருந்தாலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை, சசிகலாவுக்கு இருக்கிறது. மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும், அவரைச் சுற்றி என்ன நடந்தது என்பதை தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை, அவரைச் சுற்றியிருந்தவர்களுக்கு இருக்கிறது.

அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்தக் கேள்விகளை எழுப்பிய போதும் சசிகலாவிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.எனவேதான், மத்திய உள்துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியதாகி விட்டது” என விபரித்த சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர் ஒருவர், “ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கும் போது சில ஆதாரங்களை வழங்க இருக்கிறார் சசிகலா புஷ்பா.

முதலாவதாக, 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில், சசிகலா மற்றும் அவருடைய உறவினர்களை கட்சியில் இருந்து நீக்கினார். ஆட்சிக்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டது’ எனக் கொந்தளித்தார் ஜெயலலிதா.அடுத்து வந்த நாட்களில் நடராஜன், திவாகரன் மீது வழக்குப் பதியப்பட்டது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் மூன்று மாத கால இடைவெளியில் மீண்டும் கார்டனுக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டார் சசிகலா. ஆனால், ‘அவருடைய உறவினர்கள் நீக்கம் தொடரும்’ என அறிவித்தார். அதன் பிறகு கார்டனில் இருந்து கொண்டே, ஜெயலலிதாவுக்கு எதிராக படிப்படியான சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன. அதன் இறுதிக் கட்டமாகத்தான் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா.

‘எப்படிப்பட்ட சூழலில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்’ என்பதை இதுவரையில் சசிகலா தெரிவிக்கவில்லை. மருத்துவமனையில் இருந்த நாட்களில், அவரால் நீக்கப்பட்டவர்கள், மருத்துவமனைக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர்.இறுதிவரையில், அவருடைய உடல்நிலை குறித்த சரியான தகவல் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

‘வெளிநாட்டுக்கு அழைத்துப் போய் சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. குறிப்பாக, மருத்துவமனையில் ஜெயலலிதா இறப்புக்கு முந்தைய இரண்டு நாட்களும் என்ன நடந்தது என்பதற்கு உறுதியான காரணங்கள் இல்லை.

‘அவரைக் காப்பாற்ற முடியாமல் போனதற்கு மறைமுகக் காரணிகள் இருந்ததாக’, அப்பலோ அறிக்கை தெரியப்படுத்தியது. அது என்ன என்பதை மருத்துவமனை நிர்வாகம் தெளிவுபடுத்தவில்லை. சிகிச்சை விபரங்களை மறைத்த காரணத்துக்காக, அப்பலோ நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டியையும் விசாரிக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகள், இதயத் துடிப்பு முடக்கத்துக்கான காரணங்கள், கடைசியாக அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் ஆகியவற்றை வெளிக் கொண்டு வர வேண்டும் என சிபி.ஐ அதிகாரிகளிடம் வலியுறுத்த இருக்கிறார் சசிகலா புஷ்பா.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் நடந்த விபரங்களை ஆவணமாகத் தொகுத்திருக்கிறார். சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கும்போது, இந்த ஆதாரங்களை அவர் வழங்குவார்”.இவ்வாறு சசிகலா புஷ்பாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என நாள்தோறும் யாராவது ஒருவர் கிளம்பிக் கொண்டே இருக்கின்றனர். மருத்துவர் சிவகுமார் மட்டும் அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை.

இலண்டன் மருத்துவரின் சிகிச்சை தொடர்ந்த போது, எய்ம்ஸ் மருத்துவர்களை அனுப்பி வைத்தார் பிரதமர் மோடி. அங்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி எய்ம்ஸ் மருத்துவர்கள், மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

நாங்கள் தவறு செய்தோம் என்றால், அப்போதே மருத்துவமனையில் இருந்து எங்களை அப்புறப்படுத்தியிருக்கலாமே? எங்கள் உறவினர்கள் யாரும் எம்.எல்.ஏ பதவியில் கூட இல்லை.

எங்கள் உத்தரவுகளைப் பின்பற்றும் அளவுக்கு அதிகாரிகளும் அங்கு இல்லை. பிறகு நாங்கள் எப்படி தவறு செய்திருக்க முடியும்? மக்கள் மத்தியில் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சையை நீடிக்கவே மத்திய அரசு விரும்புகிறது.

எந்த விசாரணைக்கும் நாங்கள் தயார் என்று சசிகலா நடராஜன் தரப்பு கூறுகின்றது. இது ஒருபுறமிருக்க, அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திப்பு என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உற்சாகத்தோடு வலம் வரத் தொடங்கி விட்டார்.

‘குடியரசு தினத்தில் ஓ.பி.எஸ் கொடியேற்றுவார் என ஆளுநர் அலுவலகம் கொடுத்த உத்தரவும் ஜெயலலிதா மரணம் குறித்து அளிக்கப்பட்ட மனுவை பணியாளர் நலத்துறைக்கு ஒப்படைத்ததையும் அதிர்ச்சியோடு கவனிக்கிறார் சசிகலா’ என்கின்றனர் சசிகலா தரப்பினர்.

அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலா, ‘ஜனவரி 2-ம் திகதி முதல்வராக பதவியேற்பார்’ என நிர்வாகிகள் பேசி வந்தனர்.அதன்பிறகு, ‘ஜனவரி 12-ம் திகதி முதல்வர் ஆவார்’ என்றனர்.

அதையொட்டி, அமைச்சர்கள் பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்கள், ‘முதல்வர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும்’ என்பதை வற்புறுத்தியபடியே இருந்தனர்.

ஒருகட்டத்தில், கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை நீண்ட அறிக்கையே வெளியிட்டார்.இதுகுறித்தெல்லாம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எந்த எதிர்வினையும் கிளம்பவில்லை.வழக்கம் போல, தலைமைச் செயலகப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார். அ.தி.மு.க நிர்வாகிகளும் சசிகலாவை முன்னிறுத்துவதை மறந்து விட்டனர்.

பொதுச் செயலாளர் பதவிக்கு வந்த சில நாட்களில் முதல்வர் பதவியில் சசிகலா அமர்ந்து விட வேண்டும் என்றுதான் மன்னார்குடி உறவுகள் திட்டம் வகுத்தனர்.சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்குள், முதல்வராகி விட வேண்டும் என பணிகளை துரிதப்படுத்தினர். ஆனால் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மௌனமும் ஆளுநர் மாளிகையின் நெருக்குதல்களும் முடிவைத் தள்ளிப் போட வைத்து விட்டன.

பொதுவாக குடியரசு தின விழாவில் ஆளுநர்தான் கொடியேற்ற வேண்டும். மகாராஷ்ட்டிரா மாநில ஆளுநராகவும் வித்யாசாகர் ராவ் இருக்கிறார்.அங்கு கொடியேற்றச் செல்வதால், தமிழகத்தில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கொடியேற்றுவார்’ என கடிதம் எழுதியுள்ளது ஆளுநர் அலுவலகம்.

முதல்வர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ் விலக மாட்டார்’ என்பதை ஆளுநர் அலுவலக கடிதமே சுட்டிக் காட்டி விட்டது என அ.தி.மு.க பிரமுகர் ஒருவர விபரித்தார்.

அ.தி.மு.கவின் முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏக்களை நேற்றுமுன்தினம் சந்தித்தார் சசிகலா. முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உள்பட சிரேஷ்ட உறுப்பினர் பலரும் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.

‘விசுவாசமாக பணியாற்றுபவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது’ என சசிகலா பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் அருகில் வந்தார் டாக்டர் வெங்கடேஷ். ஜெயலலிதா மரணம் தொடர்பாக பணியாளர் நலத்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியிருந்த தகவலை சசிகலாவிடம் தெரிவித்தார்.

ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தவர், அருகில் இருந்த அறைக்குள் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவர், கார்டனுக்குச் சென்று விட்டார்.

‘சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம்’ என டெல்லி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இந்தநேரத்தில், சசிகலாவுக்கு எதிராகக் கொடுக்கப்படும் புகார்களை மத்திய அரசு பெற்றுக் கொள்வதையும் அதிர்ச்சியோடு கவனிக்கிறது சசிகலா தரப்பு.

‘உங்களுக்கு எதிராக வரும் சிறு துரும்பையும் விட்டுவிட மாட்டோம்’ என்பதை நேரடியாக தெரிவிக்கிறது மத்திய அரசு. எனவேதான், ‘நிலைமை சீராகும் வரையில் அமைதியாக இருப்போம்’ என மன்னார்குடி உறவுகள் முடிவெடுத்தனர்.

கூடவே, தீபாவுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் எரிச்சலில் இருக்கிறார் சசிகலா. தீபாவை சந்திக்க வரும் பிரமுகர்களை உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

‘தீபாவை இயக்குவது யார்?’ என்ற கேள்விதான் வலம் வருகிறது. முதலமைச்சர் உத்தரவின் பேரில் தீபா வீட்டுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் பிறந்தநாளான ஜனவரி 17-ம் திகதி அரசியல் பிரவேசம் பற்றி அறிவிக்க இருக்கிறார் தீபா. இதை மன்னார்குடி உறவுகள் எதிர்பார்க்கவில்லை.

எந்த வகையில் அவரைத் தடுத்து நிறுத்துவது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.இதேவேளை அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் இவ்வாறு கூறினார்.

“ஜனவரிக்குள் முதல்வர் ஆவது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு மன்னார்குடி உறவுகள் வந்து விட்டனர். டி.டி.வி தினகரனை அமுலாக்கத்துறையின் வழக்கு நெருக்கியதையும் தி.மு.க தலைவருக்கு ஆளுநர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததையும் கவனித்து வருகின்றனர் மன்னார்குடி உறவுகள்.

ஒருவேளை முதல்வராக சசிகலாவை முன்னிறுத்தினாலும், ‘ஒரு முதல்வரை அறிவித்து விட்டு, அடுத்த சில மாதங்களில் இன்னொருவரை முன்னிறுத்துவது எப்படி சாத்தியம்?

பன்னீர்செல்வம் பலத்தை நிரூபிக்கவில்லையென்றால், அடுத்த முதல்வரைப் பார்த்துக் கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கும் முடிவில் ஆளுநர் அலுவலகம் இருக்கிறது.

அரசின் பிடி முழுக்க ஆளுநர் கையில் இருப்பதை கார்டனால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மத்திய அரசை சமாதானப்படுத்த எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்து விட்டன. அரசியல் ரீதியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து, நிதானமாகவே செயல்பட்டு வருகிறார் சசிகலா” இவ்வாறு அ.தி.மு.க பிரமுகர் கூறினார்.

முதல்வர் கனவு தள்ளிப் போகும் கவலை ஒருபுறம் வாட்டினாலும் தீபாவின் வருகை, சசிகலா புஷ்பாவின் மனு, ஆளுநர் அலுவலக நெருக்குதல், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு என பிடியில் சிக்கியிருக்கிறார் சசிகலா.

‘இந்தியா டுடே’ மாநாட்டிலும் கண்ணீரோடு காட்சியளித்தார் சசிகலா. நெருக்குதல்கள் கொடுக்கும் வலிதான் காரணமா என்ற கேள்விகளும் அரசியல் மட்டத்தில் எழுந்துள்ளது.    (நன்றி இணையம்)

c2_12435

Related posts: