ஜெயலலிதாவுக்கு போயஸ்கார்டனில் முதலுதவி சிகிச்சை அளிக்கவில்லை – அப்பலோ மருத்துவர் வாக்குமூலம்!

Friday, July 6th, 2018

ஜெயலலிதாவுக்கு போயஸ்கார்டனில் முதலுதவி சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை என்றும் மயக்கநிலையிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் அப்பலோ மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் அப்பலோ மருத்துவர் சினேகாஸ்ரீ நேற்று முன்தினம் ஆஜரானார்.

2016 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 22 ஆம் திகதி ஜெயலலிதாவுக்கு போயஸ்கார்டனில் இருந்து அப்பலோ மருத்துவமனைக்கு அம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அம்புலன்ஸில் சினேகாஸ்ரீ மருத்துவராக இருந்துள்ளார். அந்த அடிப்படையில் ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

ஆணையத்தில் அவர் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை வருமாறு:

ஜெயலலிதாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த தகவல் அடிப்படையில் அப்பலோ மருத்துவமனையில் இருந்து சென்ற அம்புலன்ஸில் நானும் சென்றேன்.

போயஸ் கார்டனில் ஒரு நாற் காலியில் மயக்கநிலையில் ஜெயலலிதா அமர வைக்கப்பட்டிருந்தார். அங்கு முதலுதவி சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.

இதன்பின்பு போயஸ்கார்டன் பணியாளர்கள் மூலம் ஜெயலலிதாவை அம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அப்போது அம்புலன்ஸில் சசிகலா, மருத்துவர் சிவகுமார் ஆகியோர் உடன் வந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை ஜெயலலிதா மயக்க நிலையிலேயே இருந்தார்.

இருதயத்துடிப்பு சீராக அவருக்கு மருத்துவமனையில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனக் கூறப்பட்ட தகவல் தவறானது.

மேற்கண்டவாறு மருத்துவர் சினேகாஸ்ரீ தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார் என ஆணைய வட்டாரம் தெரிவித்துள்ளது.

அப்பலோ மருத்துவமனைக்கு அம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டபோது நான் எங்கு இருக்கிறேன் என்று ஜெயலலிதா தன்னிடம் கேட்டார் என சசிகலா ஆணையத்தில் ஏற்கனவே வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளார். அம்புலன்ஸில் உடன் சென்ற மருத்துவரான சினேகாஸ்ரீ ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை மயக்க நிலையிலேயே இருந்தார் என வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த முரண்பாடு குறித்து விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

Related posts: