ஜல்லிக்கட்டு…! மேலும் ஒருவர் பலி…!!

தமிழகம், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது.இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு பலரும் முனைப்பு காட்டி வருகின்ற நிலையில், இன்றைய தினம் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரத்தில் போட்டி நடைபெற்றது.
அரசின் அனுமதியோடு இடம்பெற்ற இந்த போட்டியில் 40 காளை மாடுகள் களத்தில் சீறிப் பாய்ந்தன. இதன் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை மாடு முட்டி தூக்கி வீசியுள்ளது.இதில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்றைய தினம் புதுக்கோட்டையில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் இருவர் உயிரிழந்த அதேவேளை, 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
இதேவேளை, ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெறும் இடத்தில் போதிய பாதுகாப்பு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட தேவைப்படும் அனைத்து வசதிகளும் இருக்கவேண்டும்.இவ்வாறான பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும். எனினும், அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யாமல் சில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.இதன் காரணமாகவே, உயிரிழப்புகள் ஏற்படுவதாக சமூக ஆர்வாலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Related posts:
|
|