ஜம்முவை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என வலியுறுத்தல்!

Tuesday, September 6th, 2016

காஷ்மீரில் இருந்து ஜம்முவை தனிமாநிலமாக பிரிக்கவேண்டும் என்று மாநில முன்னாள் மந்திரி பவன் குப்தா வலியுறுத்திஉள்ளார்.

காஷ்மீரில் பயங்கரவாத தளபதி பர்கான் வானி கொல்லப்பட்டதால் கடந்த 59 நாட்களாக வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைத்துக்கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் குழு ஒன்று நேற்று ஸ்ரீநகர் சென்றுள்ளது. மாநிலத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகள், கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் தனிநபர்களுடன் இந்த குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் முதல்–மந்திரி மெகபூபா மற்றும் கவர்னர் வோரா ஆகியோரையும் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்புகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க தெற்கு காஷ்மீரில் நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. பிரிவினைவாத தலைவர்கள் அனைத்து கட்சி குழுவுடன் பேச மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் முன்னாள் மந்திரி, சுயேட்சை எம்.எல்.ஏ. பவன் குப்தா காஷ்மீரில் இருந்து ஜம்முவை தனிமாநிலமாக பிரிக்கவேண்டும் என்று வலியுறுத்திஉள்ளார்.

 கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துவந்த ஆட்சியாளர்களால் ஜம்முவில் வாழும் மக்களின் அரசியல்சார்ந்த சமூகப் பொருளாதார எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய முடியவில்லை என்று பவன் குப்தா கூறிஉள்ளார்.

பவன் குப்தா வெளியிட்டு உள்ள அறிக்கையில், தன்னாட்சிக்காகவோ, சுயாட்சிக்காகவோ போராடுவதை விட்டுவிட்டு, காஷ்மீரை முஸ்லிம் மாநிலமாக மாற்றும் முயற்சியில் சில மதவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். தன்னாட்சியில் இருந்து சுயாட்சியாக மாறி, பின்னர் சுதந்திரம் என்றும், பாகிஸ்தானுடன் சேர்வது தொடர்பாகவும் திசைமாறி செல்லும் காஷ்மீரிகளின் நிபந்தனைகளை ஜம்முவில் வாழும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காஷ்மீரில் உள்ள தலைவர்கள் தங்களது சுயலாபத்துக்காகவும், அங்குள்ள மக்களின் சுயலாபத்துக்காகவும்தான் பாடுபட்டு வருகின்றனர்.

தற்போதுள்ள அரசியலமைப்பு மற்றும் அரசு நிர்வாகத்தின் அடிப்படை நோக்கமும் காஷ்மீரை மையமாக வைத்தே அமைந்துள்ளது. அரசியல்சார்ந்த பொருளாதார சமூக முன்னேற்றம் ஜம்மு மற்றும் லடாக் பகுதியில் வாழும் சிறுபான்மையின மக்களை வந்து சேராதபடி அவர்கள் வஞ்சித்து வருகின்றனர். இதுபோன்றதொரு மோசமான அடிமைத்தனத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே, காஷ்மீரில் இருந்து ஜம்முவை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்திஉள்ளார்.

epdp