ஜப்பான் நாயை பரிசாக வாங்க மறுத்த புதின்!

ஜப்பான் அரசிடம் இருந்து பரிசாக வழங்கப்படவிருந்த நாயை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மறுத்திருப்பதாக ஜப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த பரிசு மறுக்கப்பட்டதற்கான காரணத்தை கோய்ச்சி ஹாகுயுடா தெரிவிக்கவில்லை.
2012 ஆம் ஆண்டு யுமி என்கிற அக்கிட்டா வகை நாய் ஒன்றை ஜப்பான் புதினுக்கு வழங்கியது. தற்போது பரிசாக வழங்கவிருந்த நாய் அதற்கு ஆண் துணையாக வழங்கப்படவிருந்தது.
“எதிர்பாராத விதமாக எங்களுடைய இதே நிலையிலுள்ள ரஷ்ய அதிகாரிகள், ஆண் நாய் துணை ஒன்றை வழங்க இருந்தது ஊக்குவிக்கப்படவில்லை” என்று கோய்ச்சி தன்னுடைய வலைப்பூப் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
இந்த பரிசு ஏற்கப்பட்டிருந்தால், ஜப்பானில் அடுத்த வாரம் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேவோடு நடைபெறுகின்ற உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு இந்த நாய் பரிசாக வழங்கப்பட்டிருக்கும்.
அக்கிட்டா வகை நாயினம் ஜப்பானின் வட பகுதியில் உருவாகின்றன. புதின் வைத்திருக்கும் பஃபி என்கிற பல்கேரியன் ஷெப்ஃபேர்டு ஆண் நாய், 2010 ஆம் ஆண்டு பல்கேரிய பிரதமரால் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டதாகும்.
தற்போது பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் செர்கே சோய்குவால் வழங்கப்பட்ட “கோனி” என்கிற லபிராடோர் வகை நாய் 2014 ஆம் ஆண்டு இறந்துவிட்டது.
நாய்களை கண்டு அச்சமடையும் ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கலோடு நடைபெற்ற ஒரு கூட்டத்திற்கு இந்த “கோனி” நாயோடு ஒரு முறை புதின் வந்துவிட்டார். மெர்கலை மிரட்டவே புதின் அவ்வாறு செய்தார் என்று சில ஊடகங்கள் எழுதியிருந்தன.
ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜெர்மனி செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டியளித்த புதின், மெர்கல் நாய்களை கண்டால் பயப்படுபவர் என்பது தனக்கு தெரியாது என்று தெரிவித்தார். “அவருக்கு நாய்கள் பிடிக்காது என்று தெரியவந்தபோது, அவரிடம் மன்னிப்பு கேட்டேன்” என்று புதின் தெரிவித்தார்.
Related posts:
|
|