‘செல்பி’ மரணத்தில் இந்தியா முதலிடம்!

Tuesday, July 19th, 2016

செல்பி மோகம் மற்ற நாடுகளை விட இந்தியாவில்தான் அதிகம். அதேபோல செல்பியால் ஏற்படும் மரணத்தில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. நேற்று நாகர்கோவில் கடலில் நின்றபடி செல்பி எடுக்க முயன்ற ஒரு தம்பதி அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 27 பேர் செல்பி எடுக்கும்போது மரணத்தைத் தழுவியதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதில் பாதிப் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டும் இந்தியாவில் அதிக அளவிலான செல்பி மரணங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்தும் அது தொடர் கதையாக நடந்து வருவது கவலைகளை அதிகரிப்பாக உள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3 கல்லூரி மாணவர்கள் ஓடும் ரயிலின் வாசலிலிலிருந்து செல்பி எடுக்க முயன்றபோது பரிதாபமாக கீழே விழுந்து உடல் சிதைந்து பலியானார்கள். அதேபோல கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7 இளைஞர்கள் படகில் நின்றபடி செல்பி எடுக்க முயன்று கீழே விழுந்து நீரில் மூழ்கி இறந்தனர். ஆக்ராவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு ஜப்பான் சுற்றுலாப் பயணி தாஜ்மஹாலின் படியிலிருந்து செல்பி எடுக்க முயன்று கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து பலியானார்.

நாமக்கல்லில் செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் ஒருவர் 60 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பலியானார். ராஜ்கோட் அருகே 2 மணவர்கள் நர்மதா ஆற்றில் மூழ்கி பலியானார்கள். இந்த ஆண்டும் கூட செல்பி மரணங்கள் தொடர்ந்தபடிதான் உள்ளன. உண்மையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாகவே இருக்கும் போல தெரிகிறது.

நேற்று திருப்பூரைச் சேர்ந்த சிப்ஸ் கடை உரிமையாளர் உமர் ஷெரீப் என்பவர் தனது மனைவி பாத்திமா பீவி மற்றும் ஷெரீப்பின் நண்பர் சாதிக் ஆகியோர் தத்தமது குடும்பத்தினருடன் நாகர்கோவில் வந்தனர். அங்கு சொத்தவிளை பகுதியில் கடலை வேடிக்கை பார்க்ச் சென்றனர். அப்போது ஷெரீப்பும், அவரது மனைவியும் கடலில் கால் நனைத்தபடி செல்பி எடுக்க முயன்றனர். ஆனால் அப்போது ஒரு பெரிய அலை வந்து இருவரையும் வாரிச் சுருட்டிக் கொண்டு போய் விட்டது.

தங்களது கண் முன்னால் பெற்றோரை பெரிய அலை இழுத்துச் சென்றதைப் பார்த்து ஷெரீப் தம்பதியின் இரு மகள்களும் ஓடி வந்தனர். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை. ஆனால் அவர்களும் அலையில் சிக்கப் பார்த்தனர். உடனடியாக ஷெரீப் இருவரையும் மீட்டு வந்தார். ஆனால் ஷெரீப் தம்பதி கடலுக்குள் போய் விட்டனர்.

உடனடியாக தீயணைப்புப் படையினர், ஆம்புலன்ஸுக்குத் தகவல் போனது. இதற்குள் ஷெரீப் தம்பதியை மீனவர்கள் சிலர் கடலுக்குள் போய் மீட்டுக் கொண்டு வந்தனர். ஆனால் இருவரும் அதற்குள் உயிரிழந்திருந்தனர்.

செல்பி எடுப்பது பேஷனாக மாறி விட்ட போதிலும் அது உயிரைக் குடிக்கும் எமனாக சமீபகாலமாக மாறி வருகிறது. பலர் சாகசத்திற்காக உயிரைப் பணயம் வைத்து செல்பி எடுப்பது சகஜமாகி வருகிறது. ஆனால் அது கடைசியில் உயிரிழப்பில் போய் முடியும்போது துயரமாகி விடுகிறது.

பல இடங்களில் இங்கு செல்பி எடுக்கக் கூடாது என்று எச்சரிக்கை போர்டுகளும் தற்போது வைக்கப்பட்டு வருகின்றன. அந்த அளவுக்கு செல்பி பலி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts: