சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய கடல் நீர்!

Tuesday, August 20th, 2019

சென்னையின் கடல் நீர் நிறம் மாறியதால் கடற்கரையில் பொதுமக்கள் குவிந்ததுடன் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர், கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு கடல் திடீரென நீல நிறமாக மாறியது.

இது தொடர்பில் அறிந்த பொதுமக்கள் நள்ளிரவிலேயே கடற்கரையை நோக்கி படையெடுத்தனர். இதனால் ஏராளமானோர் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் குவிந்தனர்.

கடற்கரையில் திரண்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் கடல் நிறம் மாறியுள்ளதை பார்த்து ஆச்சரியமடைந்தனர். இதனால் நள்ளிரவு திருவான்மியூர் மற்றும் சென்னை நகரின் கடற்கரை பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதை கேள்விப்பட்டு கடல்நீர் ஆராய்ச்சியாளர்கள் கடல்நீர் நீல நிறத்தில் மின்னியது ஏன் என்பது குறித்து ஆய்வினை மேற்கொண்டனர்.கடல் பாசியால்தான் நிறம் மாறியதாகவும், கடல்நீரில் நைட்ரஜன் வாயு கலந்ததால் நிற மாற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்களும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து சில மீனவர்கள் கூறுகையில், “கடல் வாழ் உயிரினங்கள் கக்கும் உமிழ்நீர் அனைத்தும் ஒன்றாக கலந்து இப்படி நீல நிறத்தில் தோன்றும். இது வழக்கமானத நிகழ்வுதான். அதுவும் இரவில் மட்டும்தான் காணப்படும். பகலில் தெரியாது. நீல நிறத்தில் மாறும் நேரத்தில் கடல்வாழ் உயிரினங்களுக்கு கண்கள் தெரியாது. இந்த நிற மாற்றத்தால் யாரும் பயமோ, பீதியோ ஏற்பட வேண்டாம். சாதாரணமாக நடக்கும் ஒரு சம்பவம்தான்” என்றனர்.

இதேவேளை, மாமல்லபுரம் கடற்கரை பகுதியிலும் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கடல் இரு வண்ணங்களில் காட்சி அளித்தது. சிறிது தூரத்திற்கு வெளிர் நீல நிறமாகவும், சிறிது தூரத்திற்கு அடர் நீல நிறமாகவும் மாறியது.இதையடுத்து மீனவர்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் சென்று பார்த்தனர். இது சுமார் அரை மணி நேரம் நீடித்த பிறகு, வழக்கமான நிறத்திற்கு மாறியது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts: