சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு! 72 பேர் தப்பினர்!

சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டு சென்ற விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. உடனடியாக தரை இறக்கப்பட்டதால் 72 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு நேற்று காலை 8.45 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது. அதில் திரைப்பட சண்டை இயக்குனர் ஜாக்குவர் தங்கம் உள்பட 67 பயணிகள் மற்றும் 5 விமான சிப்பந்திகள் பயணம் செய்தனர்.
விமானம் பறந்து சென்ற சில நிமிடங்களில் விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக அவர், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு விமானத்தை மேற்கொண்டு இயக்க முடியாது. சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்க அனுமதிக்க வேண்டும் என கோரினார்.
இதையடுத்து விமானம் மீண்டும் சென்னையில் தரை இறங்கியது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்து விட்டு மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் விமானத்தில் இருந்த பயணிகள், அதே விமானத்தில் மீண்டும் பயணம் செய்ய மறுத்ததால் வேறு விமானம் மூலம் காலை 11 மணிக்கு அனைவரும் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமானி உடனடியாக விமானத்தில் ஏற்பட்ட கோளாறை கண்டுபிடித்து விமானத்தை அவரசமாக தரை இறக்கியதால் அதில் பயணம் செய்த 72 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
Related posts:
|
|