சுவாதி வழக்கு: வாக்குமூலங்கள் இன்று நீதிமன்றத்தில்!

சுவாதி கொலை வழக்கில் பதிவு செய்யப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படுகின்றன.
இதற்கிடையே, புழல் சிறையில் உள்ள ராம்குமாரை வைத்து இன்று நடத்தப்பட இருந்த வீடியோ பதிவு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுவாதி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்யும் முனைப்பில் நுங்கம்பாக்கம் பொலிசார் உள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில், ராம்குமாரை நடிக்க வைத்து வீடியோ பதிவு செய்ய, பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு நீதிமன்றத்தில் அவர்கள் அனுமதி கோரியுள்ளனர். இதனையடுத்து விசாரணை குழுவினருக்கு வீடியோ பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராம்குமார் தரப்பு வழக்கறிஞர், உயர்நீதிமன்றத்தில், தடைகோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளதால், வீடியோ பதிவு செய்வது, தள்ளிபோகுமா.? தடை செய்யப்படுமா.? என்பது இன்று தெரியவரும். இதற்கிடையே, சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில், சுவாதியின் நண்பர்கள் உள்ளிட்ட 6 பேர், நீதிபதியிடம் நேற்று அளித்த ரகசிய வாக்குமூலம், எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று சமர்பிக்கப்பட உள்ளது.
மட்டுமின்றி சுவாதி குறித்து அவரது நண்பர் பிலால் மற்றும் தோழி ஒருவர் அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் அனைத்து ஆதாரங்களையும் சேகரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.ஆனால் இதுவரை பொலிசார் சேகரித்துள்ள ஆதாரங்கள் அனைத்தும் டிஜிட்டல் ஆதாரங்கள் என்பதால் அது இந்த வழக்கில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது எனவும், பிலாலின் ரகசிய வாக்குமூலம் எந்த வகையில் துணை நிற்கப் போகிறது என வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Related posts:
|
|