சுவாதி கதையில் திருப்பம் – ராம்குமாரின் கழுத்தை வெட்டியது பொலிஸ் இன்ஸ்பெக்டர்..??

Wednesday, July 20th, 2016

போலிசார் துணையுடன் தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் எனது மகன் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்றார் என்று ராம்குமாரின் தந்தை செங்கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதனால் சுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் இன்ஜினியர் சுவாதி கடந்த மாதம் 24ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் கடந்த 1ம் தேதி செங்கோட்டை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை கைது செய்தனர்.

இந்நிலையில் ராம்குமாரின் தந்தை பரமசிவன் நேற்று வக்கீல்கள் ராம்ராஜ், ரவிக்குமாருடன் செங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:

நான் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் லைன்மேன் ஆக வேலை பார்க்கிறேன். எனது மகன் ராம்குமார் பி.இ. படித்துள்ளார். சில பாடங்களில் அரியர்ஸ் இருந்தது. அவற்றை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவதற்காக அவர் சென்னையில் தங்கி வேலை பார்த்துக் கொண்டே படித்து வந்தார். கடந்த 25-6-16 அன்று என்னிடம் பணம் வாங்குவதற்காக அவர் ஊருக்கு வந்தார்.

இந்நிலையில் கடந்த 1-7-16 அன்று நள்ளிரவு சுமார் 11 மணி அளவில் எனது வீட்டின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்து நான் வெளியே வந்த போது டி சர்ட் அணிந்து 2 பேர் நின்று கொண்டிருந்தனர். தங்களை போலீஸ் என்று கூறிய அவர்கள் இது முத்துக்குமார் வீடா என்று என்னிடம் கேட்டனர். அதற்கு நான் எங்கள் வீட்டில் முத்துக்குமார் என்ற பெயரில் யாரும் இல்லை என்று தெரிவித்தேன்.

அப்போது வீட்டின் பின் பகுதியில் இருந்து வந்த 2 போலீசார் என்னிடம், உனது மகன் கழுத்தை அறுத்துக் கொண்டான் என்று என்னிடம் கூறினர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நானும், எனது மனைவி, மகள்களும் பின்பக்கம் சென்று பார்த்தோம். அங்கு கழுத்து அறுபட்ட நிலையில் எனது மகன் குத்துக்காலிட்டு உட்கார்ந்தபடி மயங்கியவாறு இருந்தான். அவனது கழுத்தில் ரத்தம் தோய்ந்த நிலையில் இருந்தது.

எனது மகனை ஒரு போலீஸ்காரர் பிடித்திருந்தார். அருகில் பிளேடு கிடந்தது. அந்த காவலரின் கையில் ரத்தம் இருந்தது. நாங்கள் சத்தம் போட்டு அழ ஆரம்பித்ததும் அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் அங்கு திரண்டனர். உடனே தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அங்கிருந்த காவலர்களிடம், ‘அவனை உடனே ஜீப்பில் ஏத்துங்க’ என்று கத்தினார்.

இதையடுத்து காவலர்கள் ராம்குமாரை ஜீப்பில் ஏற்றிச் சென்றனர். எனவே, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தான் எனது மகனை கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

கழுத்தை அறுத்து எனது மகனை கைது செய்து சென்றது முதல் எனது உடல் நிலை மிகவும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. எனவே, என்னால் புகார் கொடுக்க முடியவில்லை. எனவே எனது வீட்டில் நுழைந்து எனது மகன் ராம்குமாரின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மீதும் அவருடன் வந்த மற்ற காவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ராம்குமார் மீது ஏற்கனவே செங்கோட்டை இன்ஸ்பெக்டர் பிரதாபன் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் தனது மகனின் கழுத்தை தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அறுத்ததாக ராம்குமாரின் தந்தை பரமசிவன் கொடுத்துள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts: