சீர்குலைந்த போர் நிறுத்த அறிவிப்பு !

Thursday, March 1st, 2018

சிரியாவில் நாளுக்கு ஐந்து மணி நேர தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பானது முதல் நாளே சீர்குலைந்து போனதாக தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின் கிழக்கு கோடா பகுதியில் தினமும் ஐந்து மணிநேரம் போர் நிறுத்த அறிவிப்பை சிரிய கூட்டுப்படைகள் வெளியிட்டனர்.

இந்த போர் நிறுத்தம் நேற்று ஆரம்பமாகும் எனவும் பொதுமக்கள் வெளியேறுவதற்கான மனிதாபிமான பாதைகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.எனினும், இந்த போர் நிறுத்தம் முதல் நாளே சீர்குலைந்து போனதாக தெரிவிக்கப்படுகிறது.

போர் நிறுத்தம் சீர்குலைந்து போனதற்கு எதிர்தரப்பே காரணம் என்று சிரியா கிளர்ச்சியாளர் தரப்பும், அரசு தரப்பும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மக்கள் வெளியேறும் பாதை மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக சிரியா குற்றஞ்சாட்டி உள்ளது.

மக்களை வெளியேற்றுவதற்காகவும், மருத்துவ உதவிகளை மேற்கொள்வதற்காகவும் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்தத்தின் போது, சிரிய படைகள் வான் தாக்குதல் மேற்கொண்டதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்த போதிலும், இந்த தற்காலிக போர் நிறுத்தம் இன்று காலை முதல் மீண்டும் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை உடனடியாக அமல்படுத்தி, அதனை உறுதி செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. எனினும் அது நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.