சீன விமான நிலையத்தில் தீ இருவர் உடல் கருகி சாவு

Saturday, April 30th, 2016

சீனாவின் ஷாங்காய் ஹாங்கியாவ் விமான நிலையத்தின் அடித்தள பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கம் போல உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு ஏராளமான தொழிலாளர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென விமான நிலையத்தின் அடித்தள பகுதியில் தீப்பிடித்தது. கண்இமைக்கும் நேரத்துக்குள் தீ மளமளவென விமான நிலையத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் அலறிஅடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

சம்பவ இடத்துக்கு உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்த போதிலும் இந்த தீ விபத்தில் சிக்கி 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது

Related posts: