சீனாவுடன் இருதரப்பு ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதற்கு அமெரிக்கா தயார்!

Friday, June 23rd, 2017

சீனாவுடன் இருதரப்பு ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சீன-அமெரிக்க இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு தொடர்பான முதல்சுற்று பேச்சுவார்த்தையின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் ஆகியோர் மேற்படி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டில்லர்ஸன் தெரிவிக்கையில், ‘ எதிர்வரும் 40 ஆண்டுகளுக்கு இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துதற்காக இரு நாடுகளும் பாதுகாப்பு நலன்களை பகிர்ந்து கொண்டுள்ளன. எனினும் இருநாடுகளுக்கு இடையிலும் குறுகிய வேறுபாடுகள் மற்றும் பிரச்சினைகளை தீர்க்கவேண்டியுள்ளது. பேச்சுவார்த்தையில் அடுத்த 40 ஆண்டுகளில் பரஸ்பர நம்பிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ், ‘ அமெரிக்க-சீன பாதுகாப்பு உறவை மேம்படுத்துவதில் நான் உறுதியாக இருக்கிறேன். அத்துடன் இருநாடுகளும் ஒன்றிணைந்து பரஸ்பர நலன்களில் ஒத்துழைக்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் சீன மத்திய இராணுவ ஆணையத்தின் (CMC) உறுப்பினரும் CMC  கூட்டு ஊழியர் திணைக்களத்தின் தலைவருமாகிய ஃபாங் ஃபெங்ஹூய் மற்றும் சீன அரசு கவுன்சிலர் யாங் ஜீச்சி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற சந்திப்பின்போது இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தே பெருமளவில் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: