சீனாவில் அரச இரகசியங்களை விற்ற நபருக்கு மரண தண்டனை!

Wednesday, April 20th, 2016

சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்தவர் ஹூவாங் யு. அரசாங்க ரகசியங்களை பாதுகாக்கிற துறையில் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் மோசமான பணியாளர் என கண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால் அவர் பணியாற்றியபோது 1½ லட்சம் ரகசிய ஆவணங்களை தன் வசப்படுத்தி வைத்திருந்திருக்கிறார். பணி நீக்கம் செய்யப்பட்ட கோபத்தில் இணையதளம் வாயிலாக தன்னிடம் உள்ள அரசாங்க ரகசிய ஆவணங்களை விற்பனை செய்வதற்கு தயாராக இருப்பதாக வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்றுக்கு தகவல் அனுப்பினார். அதைத் தொடர்ந்து அந்த உளவு நிறுவன நிர்வாகம், அவரை பயன்படுத்தி கொண்டது. அவரை தென்கிழக்கு ஆசியாவிலும், ஹாங்காங்கிலும் சந்தித்து 1½ லட்சம் அரசு ரகசிய ஆவணங்களையும் பெற்றுக்கொண்டது. அந்த ரகசியங்களில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி, ராணுவம், நிதி விவகாரங்கள் என பல விஷயங்கள் அடங்கும்.

தன்னிடம் உள்ள ஆவணங்களை விற்று தீர்த்தவுடன் அரசாங்கத்தில் ரகசிய ஆவண துறையில் பணியாற்றி வந்த தனது மனைவி, மைத்துனர் ஆகியோரையும் குறிவைத்து, அவர்கள் மூலமும் ஆவணங்களை பெற்று விற்றார். அவர் அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொண்டதும், சொத்து குவிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்து போலீசார் அவரை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அவருக்கு அரசாங்க ரகசியங்களை விற்ற குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது

Related posts: