சிரிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஜனதிபதி அஸாத் நம்பிக்கை!

Friday, December 9th, 2016

 

அலெப்போ நகரில் இராணுவத்தின் வெற்றி சிரியாவின் ஐந்து ஆண்டு உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர பாரியதொரு முன்னெடுப்பாக இருக்கும் என்று அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அஸாத் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வடக்கு நகரில் இருந்து கிளர்ச்சியாளர்களை தோற்கடிப்பதன் மூலம் மோதல் முடிந்துவிடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அலெப்போவின் பழைய நகரில் இருந்து கிளர்ச்சியாளர்கள் வாபஸ்பெற்ற நிலையில் பொதுமக்கள் வெளியேற ஐந்து நாள் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

எனினும் இந்த கோரிக்கையை நிராகரித்திருக்கும் நிலையில் அவரது இராணுவம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளும் அலெப்போவில் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒன்றை ரஷ்யா மற்றும் சீனா வீட்டோ அதிகாரித்தை பயன்படுத்தி நிராகரித்தது.

சிரியாவின் அல் வதான் பத்திரிகைக்கு பேட்டி அளித்த ஜனாதிபதி அஸாத், “அலெப்போவில் நாம் வெற்றி பெறுவோம் என்பது உண்மை. ஆனால் அதனைக் கொண்டு சிரிய யுத்தம் முடிவடையாது என்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் இது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர பாரிய முன்னெடுப்பாக இருக்கும். தீவிரவாதிகள் மேலும் பல இடங்களில் நிலைகொண்டுள்ளனர். அலெப்போவில் முடிந்த பின் அவர்களுக்கு எதிரான போரை நாம் தொடர்வோம்” என்றார்.

அலெப்போவின் தென் கிழக்கு மாவட்டங்களின் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர். அங்கு குடியிருப்பவர்கள் பெரும் அபாயத்தை சந்தித்திருப்பதாக எச்சரித்திருக்கும் கிளர்ச்சிக் குழுக்கள், அவர்களின் வேதனையை தணிக்கும் எந்த முயற்சிக்கும் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த மாவட்டங்கள் அதிக நெரிசல் கொண்டதாக மாறியிருப்பதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் கைதுசெய்யப்பட்டு சித்திரவதையை சந்திக்கும் அபாயம் குறித்து அச்சப்படுகின்றனர்.

“மக்கள் கடந்த நான்கு, ஐந்து வருடங்களாக ஒன்றும் செய்யவில்லை என்பது எனக்கு தெரியும். அவர்கள் தமது வீடுகளுக்காகி இருக்கவே விரும்பினார்கள். தற்போது அவர்கள் தமது சொந்த அரசினால் கைதுசெய்யப்படுகிறார்கள்” என்று ஆசிரியரும் செயற்பாட்டாளருமான விஸ்ஸாம் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

பல மாதங்களாக நீடிக்கும் உக்கிர தாக்குதல்கள் காரணமாக உணவு விநியோகங்கள் தீர்ந்துள்ளதோடு மருத்துவமனைகளும் செயற்படாமல் காணப்படுகின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளாக கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு அலெப்போவின் சுமார் 75 வீதமான பகுதியை அரசு கைப்பற்றி உள்ளது. அரச படையின் அண்மைய முன்னேற்றம் காரணமாக கிளர்ச்சியாளர்கள் நகரின் வடகிழக்கில் சிறு பகுதிக்குள் சுருங்கியுள்ளனர்.

coltkn-12-09-fr-06161910530_5080263_08122016_mss_cmy

Related posts: