சிரிய படை மீது துருக்கி இராணுவம் ஷெல் வீச்சு!

Friday, February 23rd, 2018

சிரிய குர்திஷ் போராளிகளுக்கு உதவியாக அப்ரின் பிராந்தியத்திற்குள் நுழைந்த சிரிய அரச ஆதரவு படையினர் மீது துருக்கி ஷெல் குண்டுகளை வீசியதாக சிரிய அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அப்ரினில் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக துருக்கி சிரிய கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து கடந்த ஒரு மாதமாக படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து வருகிறது.

அப்ரின் பிராந்தியத்தை அடைந்த அரச ஆதரவு படையினர் இருக்கும் இலக்கு மீது துருக்கி அரச படை பீரங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தியது என்று சிரிய அரச செய்தி முகாமையான சானா குறிப்பிட்டுள்ளது.

சிரிய ஆதரவு படைக்கு தாம் எச்சரிக்கை வேட்டுகளையே செலுத்தியதாக துருக்கி குறிப்பிட்டுள்ளது. “அப்ரின் நகரை நோக்கி முன்னேற முயன்ற அரச ஆதரவு தீவிரவாத குழுக்கள் எச்சரிக்கை வேட்டுகளால் சுமார் 10 கிலோமீற்றர்கள் பின்வாங்கியது” என்று துருக்கியின் அரச செய்தி முகாமையான அனடொலு குறிப்பிட்டுள்ளது.

அப்ரின் பிராந்தியத்தில் துருக்கியின் படை நடவடிக்கையை முறியடிக்கும் நோக்கில் நூற்றுக்கணக்கான அரச ஆதரவு போராளிகள் கடந்த செவ்வாய்கிழமை மதியம் அந்த பிராந்தியத்தை அடைந்தனர். இங்கு 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச படை நிலை கொள்வது இது முதல்முறையாக இருந்தது. இந்த பிராந்தியம் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு பிரிவின் (வை.பீ.ஜி) கட்டுப்பாட்டில் உள்ளது.

துருக்கியின் தாக்குதலை முறியடிக்க சிரிய அரசின் உதவி கோரப்பட்டதாக வை.பீ.ஜி பேச்சாளரான நூரி மஹ்மூத் கடந்த செவ்வாயன்று குறிப்பிட்டிருந்தார்.

Related posts: