சிரியா விவகாரம்: துருக்கி, ரஷ்யா, ஈரான் நாடுகள் உடன்பாடு!

Thursday, January 26th, 2017

சிரியாவில் மூன்று வாரங்களாக நீடிக்கும் யுத்த நிறுத்தத்தை பலப்படுத்த கூட்டு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள ஈரான், ரஷ்யா மற்றும் துருக்கி இணங்கியுள்ளன.

கசகஸ்தான் தலைநகர் அஸ்தானவில் கடந்த இரண்டு தினங்கள் இடம்பெற்ற சிரிய அமைதிப் பேச்சுவார்த்தை முடிவிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மூன்று நாடுகளும் வெளியிட்டிருக்கும் கூட்டு அறிவிப்பில், சிரிய பிரச்சினைக்கு இராணுவ தீர்வு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த அறிவிப்புக்கு சிரிய அரச தரப்பு அல்லது அரச எதிர்ப்பாளர்கள் அதரவளிக்கிறார்களா என்பது தெளிவில்லாமல் உள்ளது.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த ஒரு உடன்பாடிக்கையும் கைச்சாத்தாகவில்லை என்று கிளர்ச்சியாளர் சார்பில் பேசவல்ல ஒருவர் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு ஆதரவளிக்கும் ரஷ்யா மற்றும் ஈரானுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் துருக்கிக்கும் இடையில் “முத்தரப்பு பொறிமுறை” ஒன்றுக்கும் இணக்கம் எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை தடுத்து அனைத்து நடைமுறைகளையும் கையாண்டு முழுமையான யுத்த நிறுத்தத்தை உறுதி செய்ய வழி செய்யப்படும்” என்று அந்த மூன்று நாடுகளும் அறிவித்துள்ளன.

எனினும் இதில் ஈரானின் பங்கு குறித்து கிளர்ச்சியாளர் பிரதிநிதிகள் எதிர்ப்பை வெளியிட்டதாக அஸ்தானாவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. சிரியாவில் யுத்த நிறுத்தத்தை மீறும் ஆயுதக் குழுக்களுக்கு ஈரான் ஆதரவளித்து வருவதாக கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கசகஸ்தானில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற கிளர்ச்சியாளர் பிரதிநிதிகள் அடுத்த மாதம் ஐ.நாவின் தலைமையில் ஜெனீவாவில் இடம்பெறவிருக்கும் புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதிலும் மேற்படி மூன்று நாடுகளும் இணக்கம் வெளியிட்டுள்ளன.

எனினும் ஜெனீவா பேச்சுவார்த்தையில் அரச எதிர்ப்பாளர்களின் பங்கேற்பு அதன் கோரிக்கைகள் நீறைவேற்றப்படுவதிலேயே தங்கி இருப்பதாக சுயாதீன சிரிய படையின் சட்ட ஆலோசகரான ஒசாமா அபூ சைத் குறிப்பிட்டுள்ளனர். இந்த கோரிக்கைகள் ரஷ்யாவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஆறு ஆண்டுகளை எட்டி இருக்கும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் 300,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு 11 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

sfl

Related posts: