சர்வதேச அமைதி மாநாட்டிற்கு அப்பாஸ் அழைப்பு!

Friday, February 23rd, 2018

இஸ்ரேல் –  பலஸ்தீன பிரச்சினை குறித்து சர்வதேச அமைதி மாநாடொன்றை நடத்த பலஸ்தீன அதிகார சபை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அழைப்பு விடுத்தார்.

ஐ.நா பாதுகாப்பு சபையில் கடந்த செவ்வாயன்று அரிதான உரை ஒன்றை நிகழ்த்திய அப்பாஸ், தற்போதைய நிலைமை பலஸ்தீனர்களால் பொறுத்துக் கொள்ள முடியாதிருப்பதாக வலியுறுத்தினார்.

எனினும் நேரடி பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதே ஒரே வழி என்று இஸ்ரேலிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அறிவித்து பலஸ்தீனர்களின் ஆத்திரத்தை தூண்டி இருக்கும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பது அதனை தணிப்பதாக இருக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் டிரம்பின் இந்த அறிவிப்பை, “நூற்றாண்டில் கண்ணத்தில் விடப்பட்ட அறை” என்று வர்ணித்த அப்பாஸ், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை தொடர்ந்தும் ஏற்கப்போவதில்லை என குறிப்பிட்டார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரச்சினையில் ஜெரூசலம் விவகாரம் தீர்க்கமானதாக உள்ளது. பலஸ்தீனர்கள் கிழக்கு ஜெரூசலத்தை தனது தலைநகராக கோருவதோடு ஒட்டுமொத்த ஜெரூசலமும் தனது தலைநகர் என்று இஸ்ரேல் குறிப்பிடுகிறது.

“பலஸ்தீன பிரச்சினையை தீர்க்க பலதரப்பு சர்வதேச பொறிமுறை ஒன்று நிறுவப்பட வேண்டும்” என்று அப்பாஸ் பாதுகாப்பு சபையில் குறிப்பிட்டார். ஜெரூசலம் தொடர்பான அமெரிக்காவின் பிரகடனம் அமைதி செயற்பாடுகளை ஸ்தம்பிக்க செய்திருப்பதாக குறிப்பிட்ட அப்பாஸ், ஆக்கிரமிப்பு நிலத்தில் இஸ்ரேலின் செயற்பாடுகள் குறித்தும் சாடினார்.

“சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா தீர்மானங்கள் அடிப்படையில் 2018 நடுப்பகுதியில் சர்வதேச அமைதி மாநாடொன்றை கூட்ட நாம் அழைப்பு விடுக்கிறோம்” என்று அப்பாஸ் குறிப்பிட்டார். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான கடைசி சுற்று அமைதி பேச்சுவார்த்தை கசப்புணர்வுகளுக்கு மத்தியில் 2014 ஏப்ரல் மாதத்தில் முறிவடைந்தது.

எனினும் பலஸ்தீனர்கள் குறிப்பிடும் சர்வதேசமயமான அமைதி செயற்பாட்டுக்கு இஸ்ரேல் ஏற்பனவே மறுப்பு தெரிவித்துள்ளது. அப்பாஸுக்கு பதிலளித்த ஐ.நாவுக்கான இஸ்ரேல் தூதுவர் டன்னி டெனோன், பலஸ்தீன தலைவர் தொடர்ச்சியாக நேரடி பேச்சுவார்த்தையை தவிர்த்து வருகிறார் என்றார்.

Related posts: