சட்டவிரோத குழுக்களை அகற்றும் பணி ஆரம்பம் – பாகிஸ்தான் பிரதமர் அதிரடி!

Saturday, March 9th, 2019

பாகிஸ்தானில் நிலைகொண்டவாறு ஏனைய நாடுகளில் தாக்குதல்களை நடத்த எந்தவித பயங்கரவாத குழுக்களுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் செயல்படும் சட்டவிரோத குழுக்களை அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டு ஒருசில தினங்கள் கடந்த நிலையில், நேற்று அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானிற்கு இந்தியா உட்பட பல நாடுகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில், குறித்த தாக்குதலுக்கு உரிமை கோரிய குழுவான ஜெய்ஸ் இ மொஹமட் அமைப்பை இலக்கு வைத்து பாகிஸ்தான் பாதுகாப்பு படைத்தரப்பினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட அமைப்புகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் 182 ஆன்மிக பாடசாலைகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நடவடிக்கைகளின்போது 120இற்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts: