சசிகலா தமிழக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதை மக்கள் ஏற்கவில்லை – தீபா!

Tuesday, February 7th, 2017

தமிழக முதலமைச்சராக வி.கே சசிகலா தேர்வானதை பொது மக்கள் ஏற்கவில்லை என ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

மக்கள் நம்பிக்கைக்கு விரோதமான செயல்களில் எவரும் ஈடுபடக் கூடாது என்றும், நானும் மக்களின் எண்ணத்தை உள்வாங்கியே எனது நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என்றும் தீபா கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செவ்வாய்கிழமை செய்தியாளர்களை சந்தித்த போது தீபா இதனை தெரிவித்தார்.

இதனிடையே, எதிர்வரும் 24-ஆம் தேதியன்று மிக முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என கூறிய தீபா, ‘நான் தேர்தலில் போட்டியிட்டு அரசியலில் ஈடுபடுவேன்’ என்றும் உறுதியளித்தார்.

தமிழகத்திற்கு இதுவரை நான் என்ன செய்தேன் என என்னிடம் கேள்வி எழுப்பினால் அதற்கு என்னிடம் பதிலில்லை என்றும், ஆனால் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் புதிய முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தீபா அப்போது குறிப்பிட்டார்.

மேலும், ஜெயலலிதாவின் மருத்துவ செலவுக்கான பில் தொகை 5.5 கோடி ரூபாய் என்றும், அதற்கான பில், ஜெயலலிதாவின் உறவினர்களிடம் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது, ஆனால் அது என்னிடம் அளிக்கப்படவில்லை, நான் அதை செலுத்தவும் இல்லை என அவர் கூறினார்.

ஜெயலலிதாவின் உறவினர்கள் என அவர்கள் யாரை குறிப்பிடுகிறார்கள் என்று புரியவில்லை என்று தெரிவித்த தீபா, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்தான விளக்கம் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் தனது அரசியல் பயணத்திற்கு ஏகப்பட்ட தடைகள் ஏற்படுத்தப்படுவதாகவும், அவற்றைத் தாண்டி தான் முன்னேறுவேன் என்றும் தீபா நம்பிக்கை வெளியிட்டார்.

_94009445_deepa

Related posts: