சக்தி வாய்ந்த சுனாமி ஏற்படும் அபாயம் – இந்தோனேஷிய அதிகாரிகள் எச்சரிக்கை!

இந்தோனேஷியாவில் கடந்த வாரம் சுனாமியை ஏற்படுத்திய எரிமலையின் சீற்றம் மேலும் அதிகரித்து வருவதால், அதைவிட அதிக சக்தி வாய்ந்த சுனாமி மீண்டும் ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அந்த நாட்டில், சுனாமியை உருவாக்கிய அனக் கிரகட்டோவா எரிமலை சீற்றம், அபாயகரமான அளவுக்கு அதிகரிக்கும் எனவும், அந்த எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், சூடான பாறைகள், எரிமலைப் பிழம்பு, மிகவும் அடர்த்தியான சாம்பல் புகை ஆகியவற்றால் தாக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அதிகாரிகள் வியாழக்கிழமை எச்சரித்திருந்தனர்.
இந்த நிலையில், அந்த எரிமலைச் சீற்றத்தால் மேலும் தீவிரமான சுனாமி ஏற்படலாம் என்று அவர்கள் தற்போது எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து, தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ பூர்வோ நுக்ரோஹோ கூறியதாவது:
அனக் கிரகட்டோவா எரிமலையின் சீற்ற அபாயம் அதிகரித்துள்ளதால், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, அந்த மலைக்கு அருகே உள்ள கடற்கரைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 5 கி.மீக்கு அப்பால் நிரந்தரமாக இடம் பெயர வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்தி வருகிறோம்.
எனினும், அங்கு வசிக்கும் சிலர் அந்த இடத்தை விட்டு வெளியேற மறுப்பதாலும், போதிய இட வசதி இல்லாமல் இருப்பதாலும் அவ்வாறு அவர்களை இடமாற்றம் செய்வது மிகவும் கடினமான பணியாக இருக்கும் என்றார் அவர்.
இந்தோனேஷியாவில், கடந்த சில நாள்களாக புகைந்து கொண்டிருந்த அனக் கிரகட்டோவா எரிமலை கடந்த வாரம் சீற்றமடைந்தது. இதையடுத்து, அதிலிருந்து வெளியேறிய சாம்பல் மற்றும் புகை வானில் பல மீட்டர் உயரத்துக்கு பரவியது.
இந்த எரிமலை சீற்றத்தின் விளைவாக சுமத்ரா தீவையொட்டி சுனாமி அலை உருவானது. சுனாமி அலை சுமத்ராவின் தெற்குப் பகுதி மற்றும் ஜாவாவின் மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளை கடுமையாகத் தாக்கின.
Related posts:
|
|