கொடூர விபத்து- ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!

Friday, July 29th, 2016

சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் டிசினோ மாகாணத்தில் உள்ள Quinto என்ற நகருக்கு அருகில் தான் இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. நேற்றுமுன்தினம் காலை நேரத்தில் A2 நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.அப்போது காருக்கு பின்னால் இத்தாலி நாட்டை சேர்ந்த லொறி ஒன்று சென்றுள்ளது. லொறியை 50 வயதான நபர் ஒருவர் ஓட்டியுள்ளார்.

இந்நிலையில், பின்னால் சென்ற லொறி திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற காரின் பின்புறம் மீது பயங்கரமாக மோதியுள்ளது.இந்த மோதலால் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற மற்றொரு லொறி மீது மோதி நின்றுள்ளது. அப்போது, பின்னால் வந்த லொறி கார் மீது மீண்டும் மோதி நசுக்கியுள்ளது.

இரு லொறிகளுக்கு இடையில் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் 43 வயதான தந்தை, தாய், 12 மற்றும் 8 வயதான மகள்கள் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.இத்தாலி நாட்டு லொறியை ஓட்டிய நபர் தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து பொலிசார் விசாரணை நடத்தியபோது பலியானவர்கள் ஜேர்மனி நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.பெரும் போராட்டத்திற்கு இடையே காரில் இருந்த உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிசார் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts: