கொங்கோவில் கத்தியால் குத்தப்பட்டு 64 பேர் படுகொலை!
Tuesday, August 16th, 2016
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் வடகிழக்கு பிராந்தியத்தில், சந்தேகத்துக்கிடமான போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், குறைந்தது 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்கூறப்பட்ட தாக்குதலானது, றவாங்கோமா மாவட்டத்திலுள்ள வடக்கு கிவு பிராந்தியத்தின் பெனி நகரத்தில் கடந்த சனிக்கிழமை (13) இரவு இடம்பெற்றதாக அந்நகர மேயர் நையோனி பவான்காவா தெரிவித்துள்ளார்.
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் துருப்புக்களும் உள்ளூர் அதிகாரிகளும் 64 சடலங்களை மீட்டுள்ள நிலையில், தேடுதல் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்ற நிலையில், மேற்கூறப்பட்டுள்ள கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இறந்தோர் எண்ணிக்கை 75ஐ நெருங்கியுள்ளதாக வேறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், றவாங்கோமாவில் சடலங்கள் மீட்கப்பட்டதை கொங்கோ ஜனநாயகக் குடியரசு இராணுவத்தின் பேச்சாளர் மக் ஹஸுகாய் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை, கொல்லப்பட்டவர்கள் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டதாக அங்குள்ள ஊடகவியலாளர்கள் கூறியுள்ளனர்.
கொங்கோ ஜனனநாயகக் குடியரசுக்கு அருகிலுள்ள உகண்டா போராளிகள் குழுவான இணைந்த ஜனநாயகப் படைகளையே, மேற்படித் தாக்குதலுக்காக கொங்கோ ஜனநாயகக் குடியரசு துருப்புகள் சாடியுள்ளன. குறித்த குழுவானது கொங்கோ ஜனநாயகக் குடியரசினுள் தளங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமது பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் முகமாகவே, இராணுவ நிலைகளைக் கடந்து வந்து மக்களின் மீது இணைந்த ஜனநாயகப் படைகள் படுகொலை புரிந்ததாக கொங்கோ ஜனநாயகக் குடியரசு இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பெனிக்கு அருகில் இடம்பெற்ற பிறிதொரு சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டு ஒரு வாரத்துக்குள்ளேயே மேற்கூறப்பட்ட தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
Related posts:
|
|