கெய்ரோவுக்கு விமானம் கடலில் விழுந்தது!

Saturday, May 21st, 2016

பாரீஸ் நகரில் இருந்து கெய்ரோவுக்கு புறப்பட்டு சென்ற எகிப்து விமானம், கடலில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 66 பேரும் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் இருந்து எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவுக்கு நேற்று முன்தினம் (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 11.09 மணிக்கு ஈஜிப்ட் ஏர் விமானம் (ஏர் பஸ் ஏ320 ரகம்) புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 56 பயணிகள், 7 சிப்பந்திகள், 3 பாதுகாவலர்கள் என 66 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம், கெய்ரோவுக்கு நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு சென்றடைந்து இருக்க வேண்டும்.

ஆனால் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் எகிப்து வான்பிரதேசத்தில் அந்த விமானம் நுழைந்து, 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது (அதிகாலை 2.45 மணிக்கு) திடீரென ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாயமான அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக சில மணி நேரத்தில் தெரிய வந்தது. அதில் பயணம் செய்த 66 பேரும் பலியாகி விட்டதாக அஞ்சப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 30 பேர் எகிப்து நாட்டினர், 15 பேர் பிரான்ஸ் நாட்டினர், இங்கிலாந்து, பெல்ஜியம், ஈராக், குவைத், சவூதி அரேபியா சாட், போர்ச்சுக்கல், அல்ஜீரியா, கனடா ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் பயணம் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி 2 கைக்குழந்தைகளும், ஒரு குழந்தையும் பயணம் செய்ததாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

விமானம் மாயமான உடனே கருத்து தெரிவித்த ஈஜிப்ட் ஏர் நிறுவனம், “ரேடாரில் இருந்து அந்த விமானம் மாயமான 2 மணி நேரத்தில் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சமிக்ஞை கிடைத்தது” என கூறியது. ஆனால் அந்த தகவலை எகிப்து ராணுவம் மறுத்தது.

விபத்து நடந்ததாக நம்பப்படுகிற இடத்துக்கு எகிப்து ராணுவத்தின் தேடுதல் பிரிவினரும், மீட்பு படையினரும் விரைந்து, விமானத்தின் சிதைவுகளை தேடி வருகின்றனர்.

கிரீஸ் நாட்டுடன் இணைந்து எகிப்து ராணுவம் தேடுதல் பணியில் விமானங்களை ஈடுபடுத்தி உள்ளது. கப்பல்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

விமான விபத்தை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே உயர்மட்ட கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அவர் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். விபத்துக்கான காரணத்தை கண்டறிவதில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

Related posts: