குளிர்பான தயாரிப்பை நிறுத்திய “கோக்” நிறுவனம்!

Tuesday, May 24th, 2016

வெனிசுலா நாட்டில் நிலவிவரும் கடுமையான உணவு மற்றும் மின்சார பற்றாக்குறையை அடுத்து கோக் நிறுவனம் குளிர்பான தயாரிப்பை நிறுத்தி வைத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த கோக் நிறுவனம், போதுமான இடுபொருட்கள் இல்லாத காரணங்களால் தற்காலிகமாக குளிர்பான ஆலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

நாட்டின் மிகப்பெரும் மது தயாரிப்பு ஆலையான Empresas Polar சமீபத்தில் தங்களுக்கு தேவையான பார்லி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து மூடியதை தொடர்ந்து கோக் நிறுவனமும் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

இதனிடையே, கோக் ஆலைகளில் இனிப்பற்ற கோக் வகைகளை தொடர்ந்து தயாரிக்க இருப்பதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இடுபொருள் பற்றாக்குறை குறித்து அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மிக விரைவில் போதிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என நம்புவதாகவும் கோக் நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நிலவிவரும் பொருளாதார சூழல் காரணமாக அடிப்படை தேவைகளுக்கான உணவை வாங்குவதற்கும் நுகர்வோர் பல மணிநேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த பொருளாதார ஆண்டில் 5.8% என சுருங்கிய வெனிசுலா பொருளாதாரம் இந்த ஆண்டு 8% வரை சுருங்கும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

மின்சார பற்றாக்குறை காரணமாக கிழமையில் இரண்டு நாட்கள் மட்டுமே அலுவலங்கள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: