குறைந்த ஊதியம்: ஹெச்-1பி பணியாளர்களுக்கு ரூ.2.50 கோடி வழங்க நிறுவனத்துக்கு உத்தரவு!

Saturday, September 15th, 2018

ஹெச்-1பி விசாவில் பணியாளர்களை அழைத்து வந்து குறைந்த ஊதியம் வழங்கியதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க பணியாளர் ஊதியம் மற்றும் நேரம் பிரிவு (டபிள்யூஹெச்டி) துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவைச் சேர்ந்த பீப்பிள் டெக் குழுமத்துக்கு இந்தியாவில் பெங்களூரு, ஐதராபாதில் அலுவலகங்கள் உள்ளன. அங்கிருந்து ஹெச்-1பி விசாவில் 12 பணியாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்த நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்காமல் அதைவிட குறைவான ஊதியத்தை கொடுத்து ஏமாற்றி வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விசா பிரிவில் வரும் பணியாளர்களுக்கான ஊதியத்தை அமெரிக்கா ஏற்கெனவே நிர்ணயித்துள்ளது. அந்த விதிமுறைகளை மீறும் வகையில் பீப்பிள் டெக் நிறுவனம் செயல்பட்டுள்ளது.

இதையடுத்து, விதிமுறைகளை மீறியதற்காக அந்த நிறுவனத்துக்கு 45,564 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த 12 பணியாளர்களுக்கும் 3,09,914 டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.50 கோடி) வழங்க அந்நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: