குஜராத் குல்பர்க் சொசைட்டி கலவரங்களில் ஈடுபட்ட 24 பேர் குற்றவாளிகள் — நீதிமன்றம் தீர்ப்பு

Friday, June 3rd, 2016

குஜராத்தில் 2002ம் ஆண்டு கலவரங்களின் போது, குல்பர்க் சொசைட்டி என்ற குடியிருப்புப் பகுதியில் நடந்த படுகொலைகள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் 24 பேரை குற்றவாளிகள் என்று விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

குஜராத்தில் நடந்த இந்த கலவரங்களில் 1000க்கும் மேற்பட்ட பெரும்பாலும் முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரங்கள் கோத்ரா என்ற இடத்தில் ரெயில் பெட்டி ஒன்று தீவைக்கப்பட்டதில் இந்துப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து நடந்தன. இந்த கோத்ரா சம்பவத்தில் சுமார் 60 இந்துக்கள் கொல்லப்பட்டனர்.

குல்பர்க் சொசைட்டி கொலைகள் குறித்து விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த வேறு 36 பேரை விடுதலை செய்துவிட்டது.

இந்த சம்பவத்தில் ஒரு கும்பல் இந்த குடியிருப்புப்பகுதியைத் தாக்கி, வீடுகளை எரித்து, அங்கிருந்தவர்களை வெட்டிக் கொன்றது. மொத்தம் 69 பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி எஷான் ஜாஃப்ரியும் அடங்குவார்.

அவரது வீட்டில் தஞ்சம் புகுந்திருந்த பல முஸ்லீம் பொதுமக்களும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் உள்ளூர் விஸ்வ ஹிந்து பரிஷன் தலைவர் ஒருவரும் அடங்குவார்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்குத் தண்டனை திங்கட்கிழமை வழங்கப்படும் என்று தெரிகிறது.

தற்போது இந்தியாவின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி அப்போது குஜராத் முதல்வராக இருந்தார். அவர் இந்தக் கலவரங்களை அடக்கத் தவறிவிட்டார் என்று அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

Related posts: