காசா போரை கட்டுப்படுத்தும் முயற்சி – அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இஸ்ரேலிய தலைவர்களுடன் அவசர சந்திப்பு!

Wednesday, January 10th, 2024

காசாவில் இஸ்ரேலின் தொடரும் சரமாரித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 23,000ஐ தாண்டியுள்ள நிலையில் இந்தப் போரை கட்டுப்படுத்தும் முயற்சியாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் நேற்று (09) இஸ்ரேலிய தலைவர்களை சந்தித்துள்ளார்.

சிரியா மற்றும் லெபனானில் இஸ்ரேல் புதிய தாக்குதல்களை நடத்தி இந்தப் போர் பிராந்தியத்தில் பரவும் நெருக்கடி அதிகரித்திருக்கும் நிலையிலேயே அதனை தடுக்கும் முயற்சியாக பிளிங்கன் மத்திய கிழக்கு சென்றுள்ளார்.

மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேல் மற்றும் அதன் லெபனான் எல்லைப் பகுதிகளில் ரொக்கெட் தாக்குதல்கள் எச்சரிக்கையாக சைரன் ஒலி எழுப்பப்பட்டது. இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இடையிலான பரஸ்பர தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

முன்னதாக கடந்த திங்கட்கிழமை (08) இஸ்ரேலிய தாக்குதலில் தமது முக்கிய தளபதிகளில் ஒருவரான விசம் ஹசன் டாவில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியது.

இதேவேளை இஸ்ரேலை நோக்கி ரொக்கட் தாக்குதல்களை நடத்தி வரும் சிரியாவில் இயங்கும் ஹமாஸ் முக்கிய புள்ளியான ஹசன் அகாஷா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் காசாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை பிரதானமாக இலக்கு வைத்து  உக்கிர தாக்கதல்கள் இடம்பெற்று வந்தன. அதேபோன்று வடக்கின் ஜபலியா மற்றும் பெயித் ஹனுௗனில் இஸ்ரேல் மேற்கொண்ட குற்றச் செயல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

இதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் பிளிங்கன், ஆறு நாடுகளுக்குப் பயணம் செய்துவிட்டு திங்கட்கிழமை இரவு இஸ்ரேலை சென்றடைந்தார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் வெடித்த பின் அவர் பிராந்தியத்திற்கு செல்லும் நான்காவது முறையாக இது உள்ளது.

இந்நிலையில் அவர் நேற்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் தலைவர்கள் அதேபோன்று போர் அமைச்சரவை உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதேவேளை பலஸ்தீன பிரச்சினை ஓரங்கட்டப்படும் முயற்சி ஒன்றை அடுத்தே ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான தாக்குதல் இடம்பெற்றதாக கட்டாரில் இருந்து நேற்று பேசிய ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே குறிப்பிட்டார். இஸ்ரேல் எந்த இலக்கையும் எட்டுவதில் இருந்து தோல்வியை சந்தித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts:

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – இலங்கை கடற்படைத் தளபதி சந்திப்பு - இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங...
தொல்பொருள் வரலாற்று சின்னங்களாக இலங்கையின் ஏழு சிவாலயங்கள் - அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவிப்ப...
கிராம உத்தியோத்தர்கள் தொடர்பான சட்டத்தை தயாரிப்பதற்கான பத்திரம் அமைச்சரவைக்கு கையளிப்பு!