காங்கிரஸ் தலைவர் ராகுல் கைது!

Friday, October 26th, 2018

சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுதில்லியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் முன்னிலையில், தயாள் சிங் கல்லூரியில் இருந்து சிபிஐ தலைமையகம் வரை ஊர்வலமாகச் சென்றனர். இதில் ஐக்கிய ஜனதாதளத் தலைவர் ஷரத் யாதவ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோஷங்கள் முழங்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள சிபிஐ அலுவலகங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், சிபிஐ தலைமையகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் உட்பட அனைவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து லோதி காவல்நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

Related posts: