கறுப்பு பட்டியலில் ஷெரீஃப் மகன்கள் பெயர் : கடவுச்சீட்டுகள் முடக்கம்!

Thursday, August 9th, 2018

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மகன்கள் ஹசன், ஹுசைன் ஆகிய இருவரின் பெயர்களை அந்நாட்டு அரசு சேர்த்துள்ளது.
அத்துடன் அவர்களின் கடவுச் சீட்டு முடக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பனாமா முறைகேடு வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும், அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் விதித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நவாஸ் ஷெரீஃப், மரியம், மருமகன் முகமது சஃப்தார் ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பனாமா முறைகேடு தொடர்பான 3 வழக்குகளில் நவாஸ் ஷெரீஃபுடன் அவரது மகன்கள் ஹசன், ஹூசன் ஆகிய இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் லண்டனில் வசித்து வருகின்றனர். அவர்கள், ஒரு வழக்கு விசாரணைக்கு கூட நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர்கள் தலைமறைவாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களின் பெயர்களை தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்குமாறு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு அமைப்பு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், அவர்களின் கடவுச்சீட்டுகளை முடக்க வேண்டும் என்று கடவுச்சீட்டு வழங்கும் இயக்குநரகத்துக்கு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதன் பிறகு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுதொடர்பாக, அரசு சார்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஷெரீஃபின் மகன்களை தேடப்படும் நபர்களாக அறிவிக்க வேண்டும் என்பதற்காக, பாகிஸ்தான் புலனாய்வுத் துறை, இண்டர்போல் அமைப்பின் உதவியை கடந்த வாரம் நாடியது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி விலகல் இதனிடையே, நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஷாம்ஸ் மெஹ்மூத் மிர்ஸா, அந்த வழக்கின் விசாரணையில் இருந்து தாமாக விலகிக் கொண்டதாக, பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.