கர்ப்பிணிப் பெண் பலி – காவல்துறை தாக்குதலில்!

Thursday, March 8th, 2018

திருச்சியில் கர்ப்பிணி பெண்ணை வாகனத்தில் துரத்திச் சென்று எட்டி உதைத்து மரணத்திற்கு காரணமாக இருந்த போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் அவர்மீது சாதாரண விபத்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பெல் நிறுவனம் அருகே போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் என்பவர், மோட்டார் சைக்கிளில் வந்த ராஜா, உஷா தம்பதிகளை துரத்திச்சென்று எட்டி உதைத்ததில் பின்னால் அமர்ந்திருந்த உஷா கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் காரணமாக அப்பகுதி மக்கள் 3000க்கும் மேற்பட்டோர் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், வாகனங்கள் செல்ல வழி இல்லாமையினால், பொலிசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இதேவேளை, தமிழகம் முழுதும் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தை கொலை வழக்காக பதிவு செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: