கனேடிய உணவுகளுக்கு தடை விதித்த சீனா!

Thursday, June 27th, 2019

ஜி20 நாடுகளின் மாநாடு துவங்கியுள்ள சூழலில், கனேடிய புலால் உணவுகளின் இறக்குமதிக்கு சீனா நிர்வாகம் அதிரடி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஹூவாய் நிர்வாக அதிகாரி ஒருவர் கனடாவில் கைதான பின்னர் இருநாடுகளுக்கும் இடையே இராஜாங்க உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சீன தூதரக அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடாவில் இருந்து ஏற்றுமதிக்கு தயாராக உள்ள புலால் உணவுகளில் தடை செய்யப்பட்ட ஒருவகை ரசாயனம் காணப்பட்டதாகவும், இந்த விவகாரம் தொடர்பில் கால்நடை மருத்துவர்களிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழ்கள் அனைத்தும் போலி எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஏற்றுமதிக்கு தயாரான புலால் உணவுகளில் பயன்படுத்தப்பட்ட ரசாயனம் கனேடிய அரசால் அனுமதிக்கப்பட்டது என்றாலும், அது சீனாவில் தடை செய்யப்பட்டதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டுமின்றி சீனாவுக்கு புலால் உணவுகளை ஏற்றுமதி செய்யும் கனேடிய நிறுவனங்கள் அளித்த 188 சான்றிதழ்கள் போலி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனேடிய நிர்வாகத்தினர் தொடர்புடைய 188 சான்றிதழ்களையும் சரிபார்த்து அனுமதித்துள்ள நிலையில், சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி பாதுகாப்பு அம்சங்களை நிர்வாகம் புறந்தள்ளியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் கனேடிய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தொடர்புடைய நிறுவனங்களின் ஏற்றுமதிக்கான அனுமதிச் சீட்டை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கனேடிய நிர்வாகம், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இது நடந்துள்ளதாகவும், சட்டப்பூர்வமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

சீனாவுக்கும் கனடாவுக்கு இடையே கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மோதல் போக்கு இருந்து வருகிறது. பிரபல சீனத்து நிறுவனமான ஹூவாயின் நிர்வாக அதிகாரியை கனடா கைது செய்துள்ள நிலையில்,

இதற்கு பழிதீர்க்கும் வகையில் கனேடியர்கள் இருவரை உளவாளிகள் என கூறி கைது செய்துள்ளதுடன், இன்னொரு கனேடியரை போதை மருந்து கடத்தியதாக கூரி 15 ஆண்டுகள் சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: