கண்டம் விட்டு கண்டம் பாயும் 3 ஏவுகணைகள் வடகொரியா சோதனை !

Thursday, July 21st, 2016

உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. 3 முறை அணுக்குண்டு வெடித்து சோதித்துள்ள அந்த நாடு, கடந்த ஜனவரி மாதம் ஹைட்ரஜன் குண்டு வெடித்து உலக அரங்கை அதிர வைத்தது. இதற்காக அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் விதித்துள்ளன. ஆனாலும் வடகொரியா அவற்றை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அந்த நாடு அடுத்தடுத்து 3 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தனது கிழக்கு கடலோர பகுதியில் ஏவி சோதித்தது.

இதுபற்றி தென் கொரியாவின் பிரதமர் ஹவாங் கியோ ஆன் கூறும்போது, ‘‘கடந்த காலத்தில் ஏவுகணை சோதனைகள் என்பது மிகவும் அபூர்வமாக இருந்தன. இப்போது அவை தொடர்ந்து நடந்து வருகின்றன. எங்கள் தேச பாதுகாப்புக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது’’ என குறிப்பிட்டார்.

வடகொரியா சோதித்துள்ள ஏவுகணைகள் 500 கி.மீ., முதல் 600 கி.மீ. தூரம் வரை சென்றதாகவும், அவை தென் கொரியாவுக்கு சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை படைத்தவை எனவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்த ஏவுகணை சோதனைகளை தான் கண்டறிந்துள்ளதாகவும், அதே நேரத்தில் அதன்காரணமாக தனக்கு பாதிப்பு ஏதும் கிடையாது எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

Related posts: